சரத் பவாருக்கு ஸ்டாலின் வைத்த வேண்டுகோள்: இதை நீங்க மறுக்க கூடாது!

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை சரத் பவார் மீண்டும் ஏற்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை மையமாக கொண்டு இயங்கும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் சரத் பவார் கடந்த மே 2ஆம் தேதி அறிவித்தார். அத்துடன் தேர்தல் அரசியலில் இருந்தும் விலகி இருப்பதாக கூறினார். மகாராஷ்டிராவில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் தலைவர்களில் ஒருவரான சரத் பவாரின் முடிவு பல தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1999ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கியதில் இருந்து அக்கட்சியின் தலைவராக பதவிவகித்து வந்த சரத் பவாருக்கு தற்போது வயது 82. இவருக்கு அடுத்தபடியாக சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே தலைவராக பதவியேற்பார் என்ற பேச்சு உருவானது. அந்த பதவிக்கு காய் நகர்த்தி வந்த சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவாருக்கு இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் தலைமையில் குறிப்பிட்ட சில எம்.எல்.ஏக்கள் அணி திரண்டு தனி கட்சி அமைக்கவோ, பாஜகவில் இணையவோ வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்ட நிலையில் சரத்பவார் அதிரடியாக இந்த முடிவை அறிவித்தார்.

2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவுக்கு எதிராக வலிமையான அணியை அமைப்பதில் சரத் பவார் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியையும், காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத பிற பிராந்திய கட்சிகளையும் பேச்சுவார்த்தையின் மூலம் இணைக்கும் வேலையை சரத் பவார் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சரத் பவார் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது தேசிய அளவில் பேசுபொருளானது.

பாஜகவுக்கு எதிரான வலிமையான அணியை அமைக்க விரும்பும் தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
, சரத் பவார் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வரவிருக்கும் 2024 பொதுத் தேர்தலை மையமாகக் கொண்ட தேசிய அரசியலில், மதசார்பற்ற கூட்டணியை இந்தியா முழுவதும் வலிமைப்படுத்துவதில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரான சரத் பவார் அவர்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து அவர் வழிநடத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வைத்த இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து பிற மாநில முதல்வர்களும், பல்வேறு பிராந்திய கட்சித் தலைவர்களும் சரத் பவாரை வலியுறுத்த வாய்ப்பு உள்ளது. இதற்கு சரத் பவார் என்ன பதில் அளிக்கப் போகிறார், தனது முடிவை மாற்றிக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.