பெங்களூரு, ‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள், கர்நாடக அரசின் கருவூலத்தில் இல்லை’ என, நீதிபதி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இவ்வழக்கில் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, விலை உயர்ந்த புடவைகள், சால்வைகள், செருப்புகள் உள்ளிட்ட பொருட்கள், கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டன.
‘பறிமுதல் செய்யப்பட்ட புடவைகள், சால்வைகள், செருப்புகள் ஆகியவற்றை, 30 ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
இதனால், அவற்றை பொது ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தை, கர்நாடகா அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும்’ என, சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர், பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட, கிரண் ஜவளி என்ற அரசு வக்கீலை, கர்நாடக அரசு நியமித்தது. இந்நிலையில், நரசிம்ம மூர்த்தியின் மனுவை நேற்று நீதிபதி மோகன் விசாரித்தார்.
அப்போது, ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா சார்பில் ஆஜரான வக்கீல் சத்யகுமார், ‘ஜெயலலிதாவின் சொத்துக்களை, அவரது வாரிசான தீபாவிடம் ஒப்படைக்க வேண்டும்’ என கோரினார்.
அப்போது, நீதிபதி மோகன், ‘சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் வாரிசுகளுக்கு சேராது’ என்றார். மேலும், உரிய முறையில் மனு தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் வாதிடும்படி அறிவுறுத்தினர்.
பின் ‘மனுதாரர் ஏலத்தில் விடும்படி கேட்ட, ஜெயலலிதாவின் பொருட்கள் அரசு கருவூலத்தில் இல்லை. ஜெயலலிதாவிடம் இருந்து சில முக்கியமான பொருட்கள் மட்டுமே, பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மீதமுள்ள பொருட்கள் பட்டியலில் மட்டுமே இணைக்கப்பட்டு உள்ளது’ எனவும் நீதிபதி கூறினார்.
இதனால், பறிமுதல் செய்யப்பட்ட உண்மையான சொத்துக்கள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற உள்ளதாக, நரசிம்மமூர்த்தி தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்