மேட்டூர்: மேட்டூர் அடுத்த பண்ணவாடிக்கு திருவிழாவுக்கு வந்த தொழிலாளி காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது முழ்கினார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம் பழையபாளையம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (48). வெல்டிங் தொழிலாளி. மேட்டூர் பண்ணவாடியில் உள்ள அண்ணன் குப்புசாமி வீட்டிற்கு கடந்த 2ம் தேதி மாரியம்மன் திருவிழாவைக் காண தனது குழந்தைகளுடன் வந்தார். மாரியம்மன் கோயில் திருவிழாவின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா முடிந்தவுடன், உறவினர்கள் 3 பேருடன் சேர்ந்து குளிப்பதற்காக பண்ணவாடி காவிரி ஆற்றுக்கு சென்றனர். அப்போது, 4 பேரும் குளித்து கொண்டிருக்கும் போது, ராஜா திடீரென மூழ்கினார். இதனை பார்த்த உறவினர்கள் காப்பாற்ற முயன்ற நிலையில், அவரை மீட்க முடியவில்லை.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மேட்டூர் தீயணைப்பு துறையினர் மற்றும் கொளத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேட்டூர் தீயணைப்பு அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான வீரர்கள் பரிசல் மூலம் ராஜா மூழ்கிய இடத்தை சுற்றி தேடினர். அது ஆழம் மிகுந்த பகுதி என்பதால் வலை வீசியும் தேடினர். சுமார் 2 மணி நேரமாக தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே, ராஜா மூழ்கிய குறித்து தகவலறிந்த குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் குவிந்தனர்.
இந்நிலையில், இன்று மாலை 6 மணியளவில் பரவலாக மழை பெய்ய தொடங்கியததால், ராஜாவை தேடும் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழை, மற்றும் இரவு நேரம் எனபதால் அவரை தேடும் பணியை தீயணைப்பு துறையினர் நிறுத்தினர். நாளை காலை மீண்டும் தேடும் பணி தொடங்கப்படும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.