சென்னை : இயக்குநர் செல்வராகவன் அடுத்தடுத்த சிறப்பான படங்களை இயக்கி சர்வதேச அளவில் சிறப்பான இயக்குநராக வலம்வருபவர்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் நானே வருவேன். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் இயக்குநர் செல்வராகவன்.
ரசிகரின் ட்வீட்டிற்கு பதிலளித்த செல்வராகவன் : இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷின் அண்ணன் மற்றும் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன். இவர் தன்னுடைய அப்பாவுடன் இணைந்து துள்ளுவதோ இளமை படத்தில் பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தில்தான் நடிகர் தனுஷ் அறிமுகமானார். தொடர்ந்து காதல் கொண்டேன் படத்தை இயக்கினார் செல்வராகவன். இந்தப் படத்திலும் நடிகர் தனுஷ்தான் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தன.
தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, 2ம் உலகம், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களை கொடுத்துள்ளார் செல்வராகவன். இவரது படங்கள், வெளியான காலகட்டத்தை காட்டிலும் பின்னர், மிகுந்த வரவேற்பை பெற்றன. ட்விட்டர் பக்கத்தில் இவர் மிகவும் ஆக்டிவாக காணப்படும் நிலையில், அவ்வப்போது அடுத்தடுத்த பகிர்வுகளை வெளியிட்டு வருகிறார். அவை பெரும்பாலும் வாழ்க்கை குறித்த பதிவுகளாகவே அமைகின்றன.
கடந்த வாரத்தில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்க்கையில் நம்முடைய கதை முடிந்தது என்றால் உலகத்திற்கு அவ்வளவு சந்தோஷம், கூத்தாடும், உங்களை புதைத்துவிட்டுதான் மறுவேலை பார்க்கும். அதிலிருந்து மீண்டு வருவதுதான் உங்களது சாதனை என்று பதிவிட்டிருந்தார். இதுபோன்ற பல பதிவுகளை அவர் பகிர்ந்து வருகிறார். இயக்குநராக சமீபத்தில் இவரது நானே வருவேன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தில் அவரது தம்பி தனுஷ், இரட்டை கேரக்டர்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில், அடுத்தடுத்த படங்களில் நடிகராகவும் இவர் நடித்து வருகிறார். விஜய்யின் பீஸ்ட், சாணிக்காயிதம் போன்ற படங்கள் இவரது நடிப்பில் வெளியாகியுள்ளன. அடுத்ததாக மார்க் ஆண்டனி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் செல்வராகவனின் ரசிகர் ஒருவர், காமெடி நடிகர் விவேக் ஒரு படத்தில் சொல்வார், இயக்குநர் ஒவ்வொரு பிரேமியிலும் செதுக்கியிருக்கிறார் என்று, அப்படி ஒரு படம் காதல் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதில் செதுக்கியிருக்கிறார் என்று கூறுவதற்கு பதிலாக, செத்திருக்கிறார் என்று அந்த ரசிகர்கள் தன்னுடைய பதிவில் எழுத்துப்பிழை செய்துள்ளார். இதைப் பார்த்துவிட்டு செல்வராகவன் பதில் கொடுத்துள்ளார். அதில், ஏன் நண்பா, நான் சாகவில்லை,ஓய்வும் பெறவில்லை, எனக்காக என்னுடைய நேரித்தை கொஞ்சம் எடுத்துக் கொண்டேன், அவ்வளவுதான், நான் என்னுடைய 40களில்தான் இருக்கிறேன், மீண்டும வந்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார்.