திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் எந்த ஒரு பேருந்து சேவையும் நிறுத்தப்படவில்லை என்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள அனைத்தும் உண்மைக்கும் மாறான தகவல் என்றும், அமைச்சர் சிவசங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்காக புதிதாக 4,300 பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.
தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் இருக்கும் பெயரும், புகழையும் பார்த்து எடப்பாடி பழனிச்சாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அதிமுக ஆட்சியில் செய்த தவறையும், பொய்யையும் மறைக்கவே எடப்பாடி பழனிச்சாமி இப்படி ஒரு பொய்யான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு மீது சேற்றை வாரி இறைக்கும் வகையில், பொய்யும், புரட்டுமாகவே எடப்பாடி பழனிச்சாமியின் அந்த அறிக்கை உள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துனர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
ஓட்டுநர், நடத்துனர் பற்றாக்குறையால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் தான் 2000 வழித்தடங்கள் முடங்கி இருந்தன. கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ஒரு ஓட்டுநர், நடத்துனர் கூட பணியில் சேர்க்கப்படவில்லை” என்பதனை சுட்டிக்காட்டி அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார்.