குஜராத்தில் மாயமான 40 ஆயிரம் பெண்கள், சிறுமிகள்.. விபச்சாரத்திற்கு விற்பனை.. அதிர்ச்சி தகவல்

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு காணாமல் போகும் பெண்கள் இளம் வயதிலேயே கடத்தப்பட்டு விபச்சாரத்திற்கு விற்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த அதிர்ச்சிகரமான தகவலை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த தரவுகளின்படி, 2016-ல் 7,105 பெண்களும், 2017-ல் 7,712 பெண்களும், 2018-ல் 9,246 பெண்களும், 2019-ல் 9,268 பெண்களும் காணாமல் போயுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் மட்டுமே 8,290 பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 41,621 ஆக பதிவாகியிருக்கிறது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஒரு சட்டமன்ற கூட்டத்தில் அம்மாநில பெண்கள் காணாமல் போன பட்டியல் கடந்த 2021 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத்தில் வெளியானது. அதன்படி, அகமதாபாத் மற்றும் வதோதராவில் 2019-20 ஒரு வருடத்தில் மட்டும் 4,722 பெண்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் எங்கு இருக்கிறார்கள்? எதற்காக கடத்தப்படுகிறார்கள்? வேலைக்காக புலம்பெயர்ந்து சென்றார்களா என்பது அம்மாநிலத்துக்கே தெரியவில்லை.

ஆனால், இதுகுறித்து குஜராத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் பகிர்ந்த சில தகவல்கள் பகீர் கிளப்பியுள்ளது.

சிறுமிகள் விற்பனை

இதுகுறித்து குஜராத்தின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினருமான சுதிர் சின்ஹா கூறியது,

“காணாமல் போன சில வழக்குகளில், சிறுமிகள் மற்றும் பெண்கள் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்படுவதை நான் பார்த்துள்ளேன். இவ்வாறு காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளை காவல்துறை தீவிரமாக கையாளவில்லை. இதனால் இப்பிரச்சினைக்கு முடிவில்லாமல் உள்ளது. சிறுமிகளையும், பெண்களையும் கடத்தி வேறு மாநிலத்தில் விபச்சாரத்திற்கு தள்ளுவதென்பது கொலை வழக்கைவிட மோசமானது. காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் என்றாவது மகள்கள் திரும்பி வருவார்கள் என்று நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள் என அவர் கூறினார்.

மனித கடத்தல்

முன்னாள் கூடுதல் காவல்துறை இயக்குநர் டாக்டர் ராஜன் பிரியதர்ஷி கூறுகையில், சிறுமிகள் காணாமல் போனதற்கு கடத்தப்படுவதுதான் காரணம். எனது பதவிக் காலத்தில், காணாமல் போன பெண்களில் பெரும்பாலோர் சட்டவிரோதமாக மனித கடத்தல் குழுக்களால் வேறு மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களை விற்பனை செய்வது தெரிய வந்தது. கேடா மாவட்டத்தில் நான் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது, அந்த மாவட்டத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு ஏழைப் பெண்ணைத் கடத்தி சென்று, கூலிக்காக அந்த பெண்ணை விற்றுவிட்டார். தீவிர நடவடிக்கைக்கு பிறகு அந்த பெண்ணை எங்களால் மீட்க முடிந்தது. ஆனால், அனைத்து வழக்குகளிலும் இப்படி ஒரு சந்தர்ப்பம் நேராது என அவர் கூறினார்.

இந்த அதிர்ச்சி தகவல் குறித்து குஜராத் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஹிரேன் பேங்கர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ” கேரளா பெண்களை பற்றி பாஜக தலைவர்கள் விமர்சிக்கிறார்கள். ஆனால், நாட்டின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலமான குஜராத்தில் 40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளனர்” என்று அவர் விமர்சித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.