பாகிஸ்தான் ராணுவ கமாண்டர் இல்லம் சூறை.. உணவு, மயில்களை தூக்கிச் சென்ற போராட்டக்காரர்கள்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அவரது தி பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லாகூரில் உள்ள ராணுவ காமாண்டர் இல்லத்தில் நுழைந்து சூறையாடியதோடு, அங்கிருந்த உணவுப் பொருட்களைக் கைப்பற்றி உண்டனர்.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் கடந்த ஆண்டு ஏப்ரலில் பதவி விலகினார். அவரது தலைமையிலான கூட்டணியில் இருந்து, முக்கியமான கட்சி பிரிந்து, எதிர்க்கட்சியுடன் இணைந்ததால், நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் முன்பே இம்ரான் கான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. இந்த நிலையில் ஆளும் கட்சிக்கு எதிராக இம்ரான் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தார். கடந்த நவம்பர் மாதம் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இம்ரான் கான் மீது பாகிஸ்தானில் பிரச்சாரத்தின்போது நீதித் துறையைச் சேர்ந்தவர்களுக்கும், போலீசாருக்கும் மிரட்டல் விடுத்த வழக்கு, பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது வெளிநாட்டுப் பயணத்தில் முக்கியப் பிரமுகரிடமிருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் தனது சொந்த கணக்கில் சேர்த்த வழக்கு என 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக இம்ரான் கான் இஸ்லாமாபாத் வந்தார். அப்போது அவரை அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் போலீசார் கைது செய்தனர். இம்ரான் கானை சுற்றிவளைத்த அதிரடிப்பபடையினர் அவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இம்ரான்கான் வைத்து கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர். சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Protestors looted food and peacocks from Lahore Corps Commander House

பைசலாபாத் நகரில் உள்ள உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லாவின் வீட்டின் மீதும் ஏராளமான பிடிஐ கட்சித் தொண்டர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். லாகூர், ஃபைசாபாத், பெஷாவர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, கராச்சி, எனப் பல்வேறு பகுதிகளிலும் இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ராவல்பிண்டியில் உள்ள இராணுவத் தலைமையகத்தின் பிரதான வாயிலை அடித்து நொறுக்கினர். கராச்சியில் பிடிஐ கட்சியைச் சேர்ந்த போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களை விரட்டியடித்தனர்.

ஏராளமான பி.டி.ஐ கட்சியினர் லாகூரில் உள்ள ராணுவ கமாண்டர் இல்லத்திற்குள் நுழைந்து கேட் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும், உள்ளே புகுந்து சூறையாடியதோடு, அங்கிருந்த உணவுப் பொருட்களையும் கைப்பற்றி உண்டனர். அங்கிருந்த மயில்களை உயிரோடு பிடித்துச் சென்றனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.