கோவாவில் இருந்து கர்நாடகாவிற்கு மக்களை அனுப்புவது ஏன்? – பாஜகவுக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: கோவாவிலிருந்து கர்நாடகாவிற்கு மக்களை பாஜக அனுப்பியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சி, கள்ள வாக்கு செலுத்த முயற்சி நடக்கிறதா என்றும் வினவியுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைக்கு புதன்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. இந்தநிலையில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக பாஜக ஏன் கோவாவிலிருந்து கர்நாடகாவிற்கு மக்களை அனுப்பி வைக்கிறது என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பேருந்து ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. மேலும் அதில்,”கோவாவிலுள்ள பாஜக அரசு கடம்பா போக்குவரத்துக் கழக பேருந்தில், கோவாவிலிருந்து இன்று(மே 9) இரவு வடக்கு கர்நாடகாவிற்கு மக்களை அனுப்பி வைக்கிறது? ஏன்.. ஏதாவது சட்டவிரோத பணம் பரிமாற்றப்படுகிறதா அல்லது கள்ள வாக்கு செலுத்த முயற்சிக்கப்படுகிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா, அதே பேருந்து வீடியோவை வெளியிட்டு, கர்நாடகாவில் நடந்த மோடியின் பேரணிக்கு 100 பேருந்துகளில் கோவாவிலிருந்து மக்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா தனது ட்விட்டர் பக்கத்தில் கர்நாடகா டிஜிபி-ஐ டேக் செய்து இதே பேருந்து வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், இது ஒரு பெருங்குற்றம். சட்டவிரோத பணம் கடத்தப்படுகிறதா?, கர்நாடகா போலீஸார் எங்கே? கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம், தண்டேலி பகுதியிலுள்ள விசிலிங் வூட்ஸ் ஜங்கிள் ரிசார்ட்டில் என்ன நடக்கிறது? அங்கு விஸ்வஜித் ரானே 6 அறைகளை முன்பதிவு செய்துள்ளாரா? அதன் நோக்கம் என்ன?, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கான இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13ம் தேதி எண்ணப்பட உள்ளன. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா என்பதால், இம்மாநிலத்தின் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அக்கட்சியும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.