சட்டசபை தேர்தலில் இன்று காலை 7:00 மணிக்கு… ஓட்டுப்பதிவு துவக்கம்| Voting begins today at 7:00 am in the assembly elections

பெங்களூரு : கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு, இன்று காலை 7:00 மணிக்கு துவங்கி, மாலை 6:00 மணிக்கு நிறைவு பெறுகிறது. தேர்தல் பணியில், 4 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், 224 தொகுதிகளிலும் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியின் பதவிக் காலம், வரும் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

புதிய சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. இதற்கான பகிரங்க பிரசாரம், நேற்று முன்தினம் மாலை 6:00 மணியுடன் நிறைவு பெற்றது.

தொகுதியை சேராத தலைவர்கள் வெளியேறினர். வேட்பாளர்கள் நேற்று வீடு, வீடாக சென்று, அமைதியாக ஓட்டு சேகரித்தனர்.

5.31 கோடி வாக்காளர்கள்

பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., உட்பட பல்வேறு கட்சியினர், சுயேச்சை என 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் உள்ள 224 தொகுதிகளிலும் இன்று காலை 7:00 முதல், மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

மாநிலம் முழுதும், 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி பெற்றுள்ளனர். மொத்தம், 58 ஆயிரத்து 545 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஓட்டுப்பதிவுக்கு தேவையான, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை அறிந்து கொள்ளும், ‘விவிபேட்’ இயந்திரங்கள் உட்பட தேவையான பொருட்கள், 224 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.

அரசு பஸ்கள்

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், பி.எம்.டி.சி., மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில், இவை ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஓட்டு போட்டதும், இடது கை ஆட்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்பட உள்ளது. இதற்காக, மைசூரு பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் நிறுவனத்திடம் இருந்து, 1.20 லட்சம் அழியாத மை பாட்டில்கள் வாங்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணியில் மாநிலம் முழுதும், 4 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 1.60 லட்சம் போலீசாருடன், முதன் முறையாக வரலாறு காணாத வகையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

துணை ராணுவம்

தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, கோவா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து, 8,500 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் அதிவிரைவு படையினர், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், தேர்தல் கமிஷன் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அரசியல் கட்சியினரும் தங்கள் தொண்டர்கள், ஆதரவாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

ஓட்டுப்பதிவை முன்னிட்டு, மாநிலம் முழுதும் இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களின் பணியாளர்களுக்கும், சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விடுமுறையை பயன்படுத்தி, மக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று விடக் கூடாது என்பதால், முக்கிய சுற்றுலா தலங்கள் இன்று மூடப்படுகின்றன.

3 கட்சிகளும் தீவிரம்

தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பா.ஜ., ஆட்சி இருப்பதால், எப்படியாவது அதை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு புறம், இம்முறை வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதை அறிந்து, காங்கிரசும் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது.

மாநில கட்சியான ம.ஜ.த.,வுக்கு இது வாழ்வா, சாவா தேர்தல் என்பதால் கட்சியின் பலத்தை அடையாளப்படுத்திக் கொள்ள தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

இன்று பதிவாகும் ஓட்டுகள், வரும் 13ம் தேதி சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

அன்று மதியமே, அடுத்து ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடும்.

…பாக்ஸ்…1

சிறப்பு வசதிகள் என்னென்ன?

மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு உதவுவதற்காக, ஓட்டுச்சாவடிகளில், 45 ஆயிரத்து 823 சக்கர நாற்காலிகள்; பார்வை குறைபாடு உள்ளோருக்காக, 46 ஆயிரத்து 872 பூத கண்ணாடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாய் பேச முடியாதோருக்ககாக, 1,068 சைகை செய்யும் ஊழியர்கள்.

வாக்காளர்களுக்கு உதவி செய்ய 54 ஆயிரத்து 950 உதவியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் குடிநீர், கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

…பாக்ஸ்…2

தலைமை தேர்தல் கமிஷனர் அழைப்பு

தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கர்நாடக சட்டசபை தேர்தலின் ஒரு பகுதியாக, மாநிலத்தின் 11.71 லட்சம் புதிய வாக்காளர்கள் உட்பட மொத்தம் 5.31 கோடி வாக்காளர்கள் தவறாமல் ஓட்டுப் போட வேண்டும். பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த 103 வயதான மகாதேவ மகாலிங்க மாலி போன்ற மூத்த வாக்காளர்கள், ஓட்டுப்பதிவு செய்தது, உத்வேகத்தை அளிக்கிறது.

நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரில் உள்ள இளைஞர்கள், நகர்ப்புற வாக்காளர்கள், ஜனநாயக திருவிழாவில் பங்கேற்று அக்கறை காட்ட வேண்டும். வீட்டில் ஓட்டு போடும் வசதியை பெற்ற 80 வயதுக்கு மேற்பட்ட 76 ஆயிரம் மூத்த குடிமக்களுக்கும், 18 ஆயிரத்து 800 மாற்றுத் திறனாளிகளுக்கும் வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

…பாக்ஸ்…3

12 ஆவணங்கள் காட்டி

ஓட்டு போடும் வாய்ப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர், 12 ஆவணங்களை காண்பித்து ஓட்டு போடுவதற்கு தேர்தல் கமிஷன் வாய்ப்பு வழங்கியுள்ளது.

என்னென்ன ஆவணங்கள்?

* ஆதார் அடையாள அட்டை* ஓட்டுநர் உரிமம்* தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை* தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத் துறை சார்பில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை* படத்துடன் கூடிய வங்கி, தபால் கணக்கு பாஸ் புத்தகம்* பாஸ்போர்ட்* தொழிலாளர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு அட்டை* படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்* வருமான வரி பான் அட்டை* எம்.எல்.ஏ., – எம்.பி., அடையாள அட்டை* மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொது நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கிய படத்துடன் கூடிய அடையாள அட்டை* மாற்றுத் திறனாளிகளுக்கு சமூக நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டை.

*****

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.