முதல்வரின் செயலாளர் மிரட்டல்.. திராவிட மாடல் சூப்பர்.. அரசின் கமிட்டியில் இருந்து விலகிய நபர்.!

மாநிலக் கல்வி கொள்கையை உருவாக்கும் கமிட்டியில் இருந்து விலகுவதாக ஜவஹர் நேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மாநில கல்வி கொள்கைக்கான குழுவில் எனது பங்களிப்பை என்னால் இயன்ற அளவு சிறப்பாகவே செய்து வந்துள்ளேன். இதுவரை 22 நிறுவங்களில் மாதிரி ஆய்வுகளை முடித்தது ஆகியன அடங்கும். இறுதியாக, நான் மேற்கொண்ட தேவையான ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலும், 13 துணைக்குழுக்கள் செய்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலும் பெற்ற தரவுகளைக் கொண்டு ‘Initial Policy Inputs’ (232 பக்கங்கள்) என்ற தலைப்பில் இடைக்கால அறிக்கையை எழுதி, உயர்நிலை குழுவிற்கு சமர்ப்பித்திருக்கிறேன். இது நீண்டகாலத் திட்டத்திற்கும் நடைமுறை செயல்பாடுகளுக்கும் திசைவழி காட்டக்கூடியது.

நம்மாநிலத்தில் நிலவும் தனித்த சூழல்களையும், சிக்கல்களையும் கணக்கில்கொண்டு இந்த அறிக்கையை எழுதியிருப்பதால், இது நமக்கென தனித்துவமான இறுதிக்கொள்கையை வகுக்கப் பெரும் பங்களிப்பை வழங்கும். ஆயினும், இரகசியமாகவும், ஜனநாயமற்ற முறையிலும் செயல்படும் தலைமையைக் கொண்டதாலும், சில மூத்த IAS அதிகாரிகளின் அதிகார எல்லைமீறல்களாலும், முறையற்ற தலையீடுகளாலும் இயங்க முடியாமல் உயர்நிலை கல்விக் குழு தடுமாறிக்கொண்டிருக்கிறது.

இக்காரணத்தினால், உயர்நிலைக் குழுவில் ஒரு உறுப்பினராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் எனது பணியைத் தொடர்ந்து செய்வதற்கும், பங்களிப்பினைத் தொடர்ந்து வழங்குவதற்கும் மென்மேலும் எதிர்ப்பு அதிகரித்துக்கொண்டேயிருந்தது. அதன் விளைவாக, தேசியக்கொள்கை 2020 இன் அடியைப்பின்பற்றி மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச்சென்று கொண்டிருக்கிறது.

எனவே இந்த உயர்நிலைக் குழு உருவாக்கும் மாநிலக் கல்விக்கொள்கை பெயரில் மட்டும் மாற்றம் கொண்ட, தனியார்மய, வணிகமய, கார்ப்பரேட், சந்தை, சனாதன சக்திகளின் நலன்களை கொண்டிருக்கின்ற தேசியக்கொள்கை 2020இன் மற்றொரு வடிவமாகவே இருக்கும். இந்நிலை நீடித்தால், அது தமிழக மக்களின் விருப்புணர்வுகளுக்கும், தமிழ்ச் சமூகத்தின் உயரிய விழுமியங்களுக்கும் பெரும்பாலும் எதிராக கல்வி கொள்கையின் விளைவுகள் இருக்கும் என அஞ்சுகிறேன்.

மூத்த ஐஏஎஸ் அதிகாரி த.உதயச்சந்திரன், கடும் சினத்துடன் தகாத வார்த்தைகளைக் கூறி என்னை அச்சுறுத்தி, அவர் திணிக்கும் நிபந்தனைகளை வலுக்கட்டாயமாக ஏற்று செயல்பட வேண்டும் என அழுத்தம் தந்தார். குழுத்தலைவரிடம் பலமுறை முறையிட்டும் கூட, அவை அனைத்தையும் எதிர்வினை துளியேனும் ஆற்றாமல் புறந்தள்ளும் போக்கைக் கடைப்பிடித்தார். தீர்வினை வேண்டி குழுவின் தலைவரிடம் செய்த முறையீடுகள் அனைத்தும் கேட்கவே படாமல் போனதால், தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடமும் கடிதம் சமர்ப்பித்தேன். எனது கடிதத்திற்கு எந்த பதிலும், இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

இதன்மேலும் குழுவில் நீடிப்பது பொருளற்றது என்று உணர்கிறேன். எனவே கனத்த இதயத்துடன், இந்த உயர்மட்டக் குழுவில் இருந்து நான் விலகுகிறேன் என்பதை அறிவிக்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.