ஐஐடி மெட்ராஸ்: இந்தியாவிலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்.. அட்ராசக்க சூப்பர் படிப்பு அறிமுகம்.!

ஐஐடி மெட்ராஸ் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைத் (Department of Medical Sciences & Technology) தொடங்கியுள்ளது.

நெல்லையில் கிணற்றை ஆய்வு செய்த ஐஐடி ஆராய்ச்சி குழுவினர்கள்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற துறையை (https://mst.itm.ac.in/) புதிதாகத் தொடங்கியுள்ளது. மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் பாடத்திட்டத்தில் நான்காண்டு பிஎஸ் பட்டப்படிப்பு (B.S. Program in Medical Sciences and Engineering) அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தப் பாடத் திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாகும்.

உயிர்காக்கும் மருத்துவ சாதனங்கள், மருந்து கண்டுபிடிப்பு, மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு, அடிப்படை மருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றை மாணவர்கள் வடிவமைக்கும் வகையில் அவர்களைத் தயார்படுத்தும் இடைநிலை அணுகுமுறையை இப்பாடத்திட்டம் வழங்குகிறது. மருத்துவ நடைமுறைகளில் தொழில்நுட்பத்தை திறம்படப் பயன்படுத்த ஏதுவாக மருத்துவர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், இந்தியாவில் மருத்துவர்- விஞ்ஞானிகளுக்கான அடித்தளத்தை அமைக்கும் பணியினை இந்தத் துறை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாடத் திட்டத்திற்கான மேம்பாட்டுப் பணிகளை கவனிக்கும் இந்தியா மற்றும் வெளிநாடுகளின் உயர்மட்ட மருத்துவ நிபுணர்கள், இத்துறையின் நடைமுறை பேராசிரியர்களாக இருப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள முதன்மை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுடன் இத்துறை ஏற்கனவே தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடக்க விழாவில் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “இந்தியாவில் கோவிட் பரவல் இருந்த சமயத்தில், இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்காலத்தில் திறம்படக் கையாள வேண்டுமெனில் நாடு தழுவிய அளவில் தொழில்நுட்பத்தை மருத்துவத்துடன் இணைக்க வேண்டும் என்பது வெளிப்படையாகத் தெரிய வந்தது. இவ்வாறான சவால்கள் மீண்டும் எழாது என உறுதியாக நம்பும் அதே நேரத்தில், நமது பொறுப்புணர்வை வரையறுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமாகிறது.

தீர்க்க முடியாமல் இருந்து வந்த மருத்துவப் பிரச்சனைகளுக்கு அதிநவீன முறையில் தீர்வுகளை உருவாக்க மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒருங்கிணைப்பதுதான் எங்கள் இலக்காகும். சிகிச்சை வாய்ப்புகளை மேம்படுத்தி, சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். அனைவருக்கும் ஐஐடிஎம் என்ற பணியைத் தொடர்வதன் மூலம், மருத்துவத் துறையில் உரிய பங்களிப்பை வழங்க விரும்புகிறோம். அதன் மூலம் நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தரமான மற்றும் குறைந்த செலவிலான மருத்துவ சேவையை வழங்க முடியும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.