சிவசேனா வழக்கு | உத்தவ் தாக்கரேவை மீண்டும் முதல்வராக்க முடியாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாமல் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால், அவரை மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்த முடியாது என்று 5 பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் நபம் ரெபியா வழக்கு தீர்ப்பை பெரிய அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.

சிவசேனா பிளவு தொடர்பான வழக்கினை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஓய் சந்திரசூட், நீதிபதிகள் எம்ஆர் ஷா, கிருஷ்ணா முராரி, ஹிமா கோலி, பி.எஸ். நரசிம்ஹா ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. அந்த வழக்கில் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

அப்போது, “உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால், அவரை மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்த உத்தரவிட முடியாது. உட்கட்சி பூசல் காரணமாக ஏற்பட்ட கிளர்ச்சியைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை இழந்து விட்டார் என சபாநாயகர் முடிவு செய்ததில் தவறு செய்துவிட்டார். பெரும்பான்மையை நிரூபிக்க சபாநாயகர் அழைப்பு விடுத்ததற்கு எந்த விதமான காரணங்களும் இல்லை. உள்கட்சி, கட்சிகளுக்கு இடையில் ஏற்படும் பூசல்களைத் தீர்ப்பதற்கும், நிவர்த்தி செய்வதற்கும் அவையில் பெரும்பான்மையை நிரூபிப்பது மட்டுமே தீர்வாகாது. துணை முதல்வர் தேவிந்திர பட்நாவிஸ் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் யாரும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவில்லை. ஆளுநரின் விருப்பத்திற்கு ஏற்ப எடுத்த நடவடிக்கை சட்டபூர்வாமனது இல்லை.

ஏக்நாத் ஷிண்டே அணியின் புதிய கொறாடாவாக பாரத் கோகவாலேவை நியமித்தது சட்டவிரோதமானது. விசாரணைக்கு பின்னர் சபாநாயகர் புதிய கொறாடாவை நியமிக்க வேண்டும். எது உண்மையான சிவசேனா கட்சி என்பதை சபாநாயகரே தீர்மானிக்கலாம், அதிருப்தியாளர்கள் மீதான தகுதி நீக்க மனுக்களையும் சபாநாயகரே முடிவுசெய்யவேண்டும். சபாநாயகர் முன்பாக வரும் தகுதி நீக்க மனுக்களை தேர்தல் ஆணையத்தின் விசாரணைகளுடன் இணைக்க வேண்டியதில்லை.

தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ளும் சபாநாயகர், அட்டவணை 10-ன் படி, எம்எல்ஏக்களின் தகுதிநீத்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்று கேள்வி எழும் நிலையில், ரெபியா வழக்குத் தீர்ப்பினை பெரிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. சுமார் இரண்டரை ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அன்றைய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.

இதைத் தொடர்ந்து கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சட்டப்பேரவையின் அன்றைய துணை சபாநாயகர் நரஹரி ஜிர்வால் நோட்டீஸ் அனுப்பினார். இதனிடையே ஷிண்டே தரப்பில் துணை சபாநாயகர் நரஹரி ஜிர்வாலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது. பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து, கடந்த 2022 ஜூன் 30-ம் தேதி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது.

ஆட்சி கவிழ்ந்த விவகாரம் தொடர்பாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தின் அன்றைய சபாநாயகர் நபம் ரெபியா வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது. இதன்படி, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருந்தால் அந்த சபாநாயகர், எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்ற தீர்ப்பை முன்வைத்து மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது. நபம் ரெபியா வழக்கு தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி முறையிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.