2018 படத்திலிருந்து நிவின்பாலியை நீக்கிய இயக்குனர்

கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் ஒரு பக்கம் கேரள ஸ்டோரி திரைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினாலும், அதன் பரபரப்பையும் மீறி அதனை ஓவர்டேக் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது அதே நாளில் வெளியான 2018 என்கிற திரைப்படம். கடந்த 2018ல் கேரளாவையே புரட்டிப்போட்ட மழை வெள்ளத்தையும் அதற்காக நடந்த மீட்பு பணிகளையும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கியுள்ளார்.

இதில் கதாநாயகனாக நடிகர் டொவினோ தாமஸ் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் வினீத் சீனிவாசன், குஞ்சாகோ போபன், அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். 2018ல் கேரள மக்கள் தாங்கள் சந்தித்த கடும் மழை வெள்ள சீற்றத்தை, அதிலிருந்து தாங்கள் மீண்டதை தத்ரூபமாக இந்த படத்தில் காட்டியுள்ளார்கள் என்பதாலேயே பொதுமக்கள் இந்த படத்தை பார்க்க தியேட்டரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் நிவின்பாலி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார் என்றும் கடைசி நேரத்தில் அந்த கதாபாத்திரம் தேவை இல்லை என்பதால் நீக்கிவிட்டதாகவும் படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறும்போது, இந்த படத்தில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் சிலரை மீட்பதற்காக ஒரு மிகப்பெரிய பேருந்து ஒன்றில் நடிகர் நிவின்பாலி ஒரு மாஸான என்ட்ரி கொடுப்பதாக ஒரு காட்சியை முதலில் எழுதி இருந்தேன்.

ஆனால் பின்னர் அப்படி ஒரு காட்சி இந்த படத்திற்கு தேவையில்லை என்பதை உணர்ந்து அதை நீக்கி விட்டேன். அதற்கு முன்னதாக நிவின்பாலியிடம் நீங்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றும் கூறி இந்த காட்சியையும் அவரிடம் சொல்லி இருந்தேன். ஆனால் அவரது காட்சியை ஸ்கிரிப்ட்டில் இருந்து நீக்கி விட்டதை அவரிடம் கூறி, அதற்கான காரணத்தை சொன்னபோது பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார்” என்று கூறியுள்ளார்.

இதே இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப், நிவின்பாலி நடித்த ஓம் சாந்தி ஒசானா என்கிற படத்தின் மூலம் தான் இயக்குனர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.