“ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமை” – புதிய நாடாளுமன்ற உட்புறத் தோற்ற வீடியோவை வெளியிட்ட பிரதமர் மோடி

புதுடெல்லி: புதிய நாடாளுமன்றக் கட்டிடம் ஒவ்வோர் இந்தியரையும் பெருமைப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் அதிகாரபூர்வ முதல் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அவர் தனது பதிவில், “புதிய நாடாளுமன்றக் கட்டிடம் ஒவ்வோர் இந்தியரையும் பெருமைப்படுத்தும். சிறப்பு வாய்ந்த கட்டிடத்தின் சிறு காட்சியை இந்த வீடியோ வழங்குகிறது.

முக்கிய வேண்டுகோளை உங்களிடம் நான் வைக்கிறேன். இந்த வீடியோ உடன் உங்கள் கருத்துகளை ஒலிக்கோவையாக சேர்த்து அதனை சமூக வலைதளங்களில் பகிருங்கள். அவற்றில் சிலவற்றை நான் எனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்வேன். அவ்வாறு நீங்கள் பகிரும்போது #MyParliamentMyPride என்ற ஹேஷ்டாக்கை இணைக்க மறக்காதீர்கள்” என தெரிவித்துள்ளார்.


— Narendra Modi (@narendramodi) May 26, 2023

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் நாளை மறுநாள் காலை திறப்பு விழா காண உள்ளது. பல்வேறு மதங்களின் வழிபாடுகளைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றக் கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்க இருக்கிறார். மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், அமைச்சரவை செயலர்கள், மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச ஆட்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 25 கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், 20 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

நாட்டின் முதல் குடிமகள் என்ற முறையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முதான் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க் கொடி தூக்கியுள்ளன. அத்துடன், இந்துத்துவா சித்தாந்தவாதியும் மகாத்மா காந்திக்கு எதிரான கருத்து கொண்டவருமான வி.டி.சாவர்க்கர் பிறந்த நாளில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.