கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம்: சரியான அரசியல் பேசும் கிராமத்து ஆக்‌ஷன் படம்; ஆனால் திரைக்கதை?

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பூமியும்; மாற்றுச் சாதியைச் சேர்ந்த மூர்க்கனும் சிறு வயதிலிருந்தே உயிர் நண்பர்களாக இருக்கின்றனர்.

அதே மாவட்டத்தில் எதிர் கட்சியின் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்கும் முனியராஜ், அவரது கட்சித் தலைவரை வரவேற்க ஊர் முழுக்க போஸ்டர் ஒட்ட உத்தரவிடுகிறார். அப்படி பூமி இருக்கும் தெருவில் போஸ்டர் ஒட்டும் போது அவருக்கும் கட்சிக்காரர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. மூர்க்கன் தனது நண்பனுக்காக இறங்கி சண்டை செய்து எதிரிகளை ஓடவிடுகிறார். இதற்கிடையே ஊரில் மாநாடு நடக்கக்கூடாது என்று நீதிமன்றம் மூலமாகத் தடை வாங்குகிறார் பூமி. இதனால் கொதித்தெழும் முனியராஜ் செய்யும் செயல் பூமி மற்றும் மூர்க்கனின் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது என்பதை ஆக்‌ஷன் தெறிக்கச் சொல்வதே ‘கழுவேத்தி மூர்க்கன்’.

கிரைம் த்ரில்லர் ஜானர் படங்கள், நகர்ப்புறத்தை மையமாகக் கொண்ட கதைக்களமெனத் தொடர்ந்து வித்தியாசமாக நடித்து வந்த அருள்நிதி, இதில் கமர்ஷியல் ரூட்டில் கிராமத்து இளைஞன் மூர்க்கனாக மீசையுடன் வலம் வருகிறார். நண்பனுக்காகக் கோபப்படும் வேகம், காதல் காட்சிகளில் ரகளை, ஆக்‌ஷன் காட்சியில் கம்பீரமென பவர்பிளேயில் வெளுத்து வாங்கும் பேட்டர் போலக் கிடைத்த வாய்ப்பில் பலமாக ஸ்கோர் செய்துள்ளார். கதைக்குப் பங்களிப்பு இல்லை என்றாலும் நாயகியாக துஷாரா விஜயன் குறும்புப் பார்வை, நக்கல் பேச்சு, துருதுரு மேனரிசம் என ரசிகர்களைக் கவர்கிறார்.

கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம்

பூமியாக நடித்துள்ள சந்தோஷ் பிரதாப் தனக்குக் கொடுத்துள்ள கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து சாந்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆனால் தன்னைக் கொலை செய்ய வருகிறார்கள் என்பதை உணர்ந்தும் அதே முகபாவனையை வெளிப்படுத்தியிருப்பது சற்றே செயற்கைத்தனம். வில்லனாக வரும் முனியராஜும், ‘யார்’ கண்ணனும் டெம்ப்ளேட் வில்லன்களாக வந்தாலும் நடிப்பில் ஏதும் குறையில்லை. முனிஷ்காந்த் சிரிக்க வைக்கத் தவறினாலும் போலீஸ் ஸ்டேஷனில் அதிகாரத்துக்கு எதிராக வசனம் பேசி நடப்பது ‘மாஸ்’. கிராமத்துப் படம் என்றதும் வழக்கம்போல ரயிலில் ஆட்களை ஏற்றுவது போலக் கதாபாத்திரங்களை ஏற்றாமல், ஷேர் ஆட்டோ அளவுக்கு மட்டும் கதாபாத்திரங்களைக் கையாண்டு இருப்பதே பெரிய ஆறுதல்.

தொடக்கக் காட்சியில் கழுமரம் குறித்த வர்ணனையே ‘இது புதுசு’ என்கிற ஆர்வத்தைத் தூண்ட வைத்தாலும், இடைவேளைக்கு 20 நிமிடங்கள் முன்னர் வரை கதாபாத்திர வர்ணனையை ஜவ்வாக இழுத்ததால் ‘வந்த ஆர்வம் காணவில்லை’ என போஸ்டர் ஒட்டத் தோன்றுகிறது. இயக்குநர் சை.கௌதமராஜ் கதையின் கனத்தை இரண்டாம் பாதியில் வைத்திருப்பதால் முற்பாதி திரைக்கதையில் இன்னும் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம். ‘மீசைன்றது வெறும் முடி தான’, ‘நீங்க ஒருத்தன் தலைக்கு மேல இருக்கீங்கன்னு நெனைக்குறீங்க, ஆனா நீங்களே இன்னொருத்தன் காலுக்கு கீழதான் இருக்கீங்க’, ‘அடிவாங்குறவன் பக்கத்துலதான் நிக்கணும், அவன அடிவாங்காம பாத்துக்கிடனும்’ என்ற அரசியல் வசனங்கள் நாடகத்தன்மை இல்லாமல் கதையின் ஓட்டத்திலேயே பன்ச்சாக அதிர்கின்றன. பூமி கதாபாத்திரத்தின் காதலின் மூலம் ‘தீண்டாமைக்குள் தீண்டாமை’யாக சமூகத்தில் பின்னியிருக்கும் சாதிய மனோபாவத்தைக் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.

கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம்

கே.கணேஷ்குமாரின் சண்டைக் காட்சிகள் ‘இயற்கை’யை மீறியதாக இருந்தாலும் ரசிக்கும்படி படமாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், கிராமம் என்றாலே புழுதிப் பறக்கவேண்டும் என்ற எழுதப்படாத விதியை இந்தப் படமும் தக்கவைத்திருக்கிறது. டி.இமானின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே கேட்டதுபோலத் தோன்றினாலும் யுகபாரதியின் வரிகளில் ‘அவ கண்ண பாத்தா’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசை, சண்டைக் காட்சிகளுக்கு மட்டும் உதவியிருக்கிறது. வறண்ட நிலத்திற்கும் கருவேலமரத்திற்குள் செல்லும் காட்சிகளில் ஸ்ரீதரின் ஒளிப்பதிவு நன்று. குறியீடாக வரும் அக்காலகட்ட பிரசாந்த், கார்த்திக் ரசிகர் மன்ற போர்டுகள், கிழிந்த அரசியல் பிளக்ஸுக்குப் பின்னால் கம்பீரமாக நிற்கும் அம்பேத்கர் சிலை, கோயில் கழுமரம் எனக் கலை இயக்குநர் மகேந்திரா கவனம் பெறுகிறார். படத்தின் பெரிய எதிரியே அதன் நீளம்தான். சண்டைக் காட்சிகள் கச்சிதம் சேர்த்திருக்கிறார், ஆனால், கத்தரித்து எரிய வேண்டிய பல காட்சிகளை அப்படியே வைத்திருக்கிறார் படத்தொகுப்பளார் நாகூரான் ராமச்சந்திரன்.

கிராமத்துக் கதை என்றாலே பழைமைவாதம், மண்ணின் குணம், சாதியைத் தூக்கிப்பிடிக்கும் குறியீடுகள், பாசம், மண் வாசம் என ஊறிப்போன கதையைப் பார்த்த நமக்கு, சமத்துவத்தை நோக்கி காலத்துக்கு ஏற்றார்போல அரசியல் பேசியிருக்கும் முனைப்பு பாராட்டத்தக்கது. ஆனால், தொய்வான திரைக்கதை, நீளமான காட்சியமைப்புகள் படத்துக்கு நிஜ வில்லன்களாக மாறியிருக்கின்றன. அதேபோல க்ளைமாக்ஸ் காட்சி நெஞ்சில் தைக்கும் அளவுக்கு ஆழமாக இருந்தாலும், அதற்கு முந்தைய ஹீரோ vs வில்லன் சண்டை வழக்கமான டெம்ப்ளேட்டாக மட்டுமே கடந்துபோகிறது. அதேபோல கழுவேற்றம் குறித்த வாதமும் மரண தண்டனையை ஆதரிக்கும் போக்காகப் புரிந்துகொள்ளப்படும் ஆபத்து இருக்கிறது.

கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம்

சண்டைக் காட்சியிலிருந்த மூர்க்கம் திரைக்கதையிலும் இருந்திருந்தால் சரியான அரசியல் பேசிய இந்த ‘கழுவேத்தி மூர்க்கன்’ இன்னும் கவனம் ஈர்க்கும் மூர்க்கனாகவும் மாறியிருப்பான்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.