கிளிநொச்சியில் கணிசமானளவு காணிகளை விடுவிக்க தீர்மானம் 

கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த கணிசமான காணிகளை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்தமையினால் காடுகளாக மாறியிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் மக்கள் குடியிருப்புக்களும் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தினாலும் வனஜீவராசிகள் திணைக்களத்தினாலும் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதுதொடர்பாக, துறைசார் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடனும் ஆவண ரீதியான ஆதாரங்களை முன்வைத்து தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுத்து வந்தார்.

இந்நிலையில், வனவளப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் நிறைவேற்று அதிகாரிகளுக்கும் கிளிநொச்சி மாவட்ட துறைசார் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று (25) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, 85 ஆம் ஆண்டிற்கு முன்னர் விவசாய நிலங்களாகவும் மக்கள் குடியிருப்புக்களாகவும் இருந்தமையை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களை கொண்ட காணிகளை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டள்ளது.

இக்கலந்துரையாடலில் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரிகள், வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், காணித் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் பிரதிநிதிகள் கொண்டிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.