பொருளாதாரம் முதல் சமூக நீதி வரை: 9 ஆண்டு ஆட்சி குறித்து மோடிக்கு காங்கிரஸ் முன்வைத்த 9 கேள்விகள்

புதுடெல்லி: நரேந்திர மோடி பதவியேற்று இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு காங்கிரஸ் கட்சி 9 கேள்விகளை முன்வைத்துள்ளது.

பொருளாதாரம்: பணவீக்கமும் வேலைவாய்ப்பின்மையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பது ஏன்? பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதும், ஏழைகள் மேலும் ஏழைகளாவதும் ஏன்? பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ள நிலையிலும் பொதுச் சொத்துக்களை உங்கள் நண்பர்களுக்கு விற்பனை செய்தது ஏன்?

விவசாயம் மற்றும் விவசாயிகள்: மூன்று “கருப்பு” விவசாய சட்டங்களை ரத்து செய்யும்போது விவசாயிகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஏன் மதிக்கப்படவில்லை? குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஏன் சட்டபூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்படவில்லை? கடந்த 9 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாய் இரட்டிபாகாதது ஏன்?

ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம்: மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து எல்ஐசி-யிலும், எஸ்பிஐ வங்கியிலும் சேமித்த பணத்தை உங்கள் நண்பர் அதானி பலனடையும் நோக்கில் கொடுத்து மக்களை நெருக்கடியில் தள்ளியது ஏன்? திருடர்களை தப்பிக்க விட்டது ஏன்? பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் தலைவிரித்தாடும் நிலையில் நீங்கள் அமைதியாக இருப்பது ஏன்? இந்தியர்களை சிரமத்திற்கு உள்ளாக்குவது ஏன்?

சீனா மற்றும் தேச பாதுகாப்பு: கடந்த 2020ல் சீனாவுக்கு நீங்கள் நற்சான்றிதழ் கொடுத்த பிறகும் அவர்கள் இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமிப்பது ஏன்? சீனாவுடன் 18 பேச்சுவார்த்தைகள் நடத்த பிறகும் சீனா தனது உத்தியை ஆக்ரோஷத்துடன் கொண்டிருப்பது ஏன்?

சமூக நல்லிணக்கம்: தேர்தல் ஆதாயத்துக்காக வெறுப்பு அரசியலை வெளிப்படையாகப் பயன்படுத்துவது ஏன்? அச்சம் நிறைந்த சூழலை சமூகத்தில் உருவாக்குவது ஏன்?

சமூக நீதி: சமூக நீதியின் அடித்தளத்தை திட்டமிட்ட ரீதியில் சீர்குலைப்பது ஏன்? பெண்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர் தாக்கப்படும்போது அமைதியாக இருப்பது ஏன்? சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை புறக்கணிப்பது ஏன்?

ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி: கடந்த 9 ஆண்டுகளாக நமது அரசியல் சாசன மதிப்பீடுகளையும், ஜனநாயக அமைப்புகளையும் பலவீனப்படுத்தியது ஏன்? எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் பழிவாங்கும் அரசியலை மேற்கொள்வது ஏன்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை சீர்குலைக்க பணபலத்தை அப்பட்டமாக பயன்படுத்துவது ஏன்?

நலத்திட்டங்கள்: ஏழைகள், பழங்குடி மக்கள் ஆகியோருக்கான நலத்திட்ட நிதியை குறைத்தது ஏன்? கட்டுப்பாடுகளை அதிகரித்தது ஏன்?

கோவிட் – தவறான நிர்வாகம்: 40 லட்சம் மக்கள் கோவிட் பெருந்தொற்றால் உயிரிழந்தபோதும் அவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்காதது ஏன்? லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாத படிக்கு திடீரென லாக்டவுனை அறிவித்தது ஏன்?

இந்த 9 கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும் என்றும், அமைதி காக்கக் கூடாது என்றும் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 3 நாட்களில் நாட்டின் 35 மாநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் 35 பத்திரிகையாளர் சந்திப்புகள் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.