'அன்பு சகோதரரே'… பிடிஆரின் செயலால் நெகிழ்ந்த சீமான்… இப்படியொரு அமைச்சரா..!

12ம் வகுப்புத் தேர்வில் 600க்கு 591 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ள ஆணையூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் மாணவி ரித்யுஷா கவனம் பெற்றுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பான செய்தி வெளியானதை அடுத்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அம்மாணவியையும், அவரது பெற்றோரையும் வீட்டிற்கு வரவழைத்து பாராட்டினார்.

அப்போது அந்த மாணவியிடம் அடுத்த என்ன படிக்க போகிறாய் என்று அமைச்சர் கேட்டுள்ளார். அதற்கு மாணவி ‘ எனக்கு படிக்கப் போதிய வசதி இல்லாததால் ஆன்லைன் மூலம் டிகிரி படிக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார். உடனே அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்பதன் அவசியத்தை எடுத்துக் கூறி மதுரை லேடி டோக் கல்லூரி முதல்வரிடம் பேசி அப்பெண்ணின் மேற்படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் அம்மாணவி விரும்பும் துறையில் இடம் தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் மாணவி ரித்யுஷாவுக்கு லேடி டோக் கல்லூரியில் படிக்க சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதற்கான கட்டணத்தை அமைச்சர் பிடிஆர் வழங்கியுள்ளார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சீமான் பதிவிட்டுள்ள ட்வீட்டில்
‘ மதுரை மாவட்டம், ஆனையூர் ஈழத்தமிழர் முகாமில் வசித்துவரும் அன்புமகள் ரித்யுஷா 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 600க்கு 591 மதிப்பெண் பெற்றும், மேற்படிப்பு படிக்க வசதியற்ற ஏழ்மைநிலையில் இருக்கும் செய்தியறிந்தவுடன், ரித்யுஷாவின் உயர்கல்வி செலவை முழுமையாக ஏற்றதுடன், கல்லூரியிலும் இடம் பெற்றுக்கொடுத்த தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை அமைச்சர், அன்பிற்கினிய சகோதரர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு எனது அன்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடிப்படை வசதிகள் ஏதுமற்று, குறைந்தபட்ச கற்கும் வாய்ப்புகள் கூடக் கிடைக்கப்பெறாத, தமிழ்நாட்டின் வதை முகாமில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். அந்த வகையில் தனிப்பட்ட முறையில் தாங்கள் செய்த பேருதவி ஒரு குழந்தையின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த போதிலும், அதனை தமிழ்நாடு அரசே முன்னெடுக்கும்போதுதான் நம்மையே நம்பி வந்துள்ள ஈழச்சொந்தங்கள் அனைவரின் வாழ்விலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.

ஆகவே, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு இதனைக் கொண்டுச்சென்று, ஈழத்தமிழர் முகாம்களில் வசிக்கும் அனைத்து குழந்தைகளின் உயர்கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.