எம்.எல்.ஏ. அலுவலக திறப்பு விழாவையொட்டி பா.ஜனதாவினர் வைத்த பேனரில் சித்தராமையாவின் உருவப்படம்

சிவமொக்கா-

சிவமொக்காவில் பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலக திறப்பு விழாவையொட்டி பா.ஜனதாவினர் வைத்த பேனரில் சித்தராமையா உருவப்படம் இடம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 66 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இந்த தேர்தலில் சிவமொக்கா நகர தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட சன்னபசப்பா வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. சன்னபசப்பா, பொதுமக்களிடம் குறைகளை கேட்க வசதியாக நேரு வீதி அருகே சிவப்ப நாயக்கா வணிக வளாகம் பின்புறம் உள்ள அரசு கட்டிடத்தில் எம்.எல்.ஏ. அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த எம்.எல்.ஏ. அலுவலக திறப்பு விழாவில் சன்னபசப்பா எம்.எல்.ஏ., முன்னாள் துணை முதல்-மந்திரி ஈசுவரப்பா, அனில் எம்.எல்.சி. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பேனரில் சித்தராமையா படம்

இந்த விழாவையொட்டி மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் பா.ஜனதா தலைவர்களின் படம் பொறித்த பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரில் முதல்-மந்திரி சித்தராமையாவின் படம் இடம் பெற்றிருந்தது. பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலக திறப்பு விழா பேனரில் சித்தராமையாவின் படம் இடம் பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதாவது, பிரதமர் மோடியின் படத்துக்கு அடுத்தப்படியாக முதல்-மந்திரி சித்தராமையாவின் படம், அடுத்து முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, ஈசுவரப்பா ஆகியோரின் படம் அடுத்தடுத்து இருந்தது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையாவின் படம், அந்த பேனரில் தவறுதலாக இடம்பெற்றிருக்கலாம் என தெரிகிறது. எனினும் இந்த விவகாரம் பேசும்பொருளாக மாறி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.