அடையாள ஆவணமின்றி ரூ.2,000 மாற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: அடையாள ஆவணம் இல்லாமல் ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவினை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (மே 29) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஸ் குமார் சர்மா, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக” நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் பொதுமக்கள் ஒரு நாளில் ரூ.20,000 மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். அதற்காக எந்தவிதமான படிவத்தையும் பூர்த்தி செய்ய வேண்டியது இல்லை. ஆதார் போன்ற அடையாளச் சான்றும் அவசியம் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்நிலையில், இவ்வாறு அனுமதிக்கக் கூடாது என்று டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரும் பாஜக பிரமுகரமான அஷ்வினி உபாத்யாய், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மே 22ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில், “ரூ.2,000 நோட்டுகளை எந்த ஆவணமும், அடையாள அட்டையும் இல்லாமல் மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை திரும்பப்பெறவேண்டும். இந்த அறிவிப்பு தன்னிச்சையானது, முரண்பாடானது. பெரும்பாலான இந்தியர்கள் வசம் ஆதார் அட்டை உள்ளது. இந்தியக் குடும்பங்களில் வங்கிக் கணக்கு இல்லாதோர் மிகக் குறைந்தவரே. அப்படியிருக்க எதற்காக ஆதார் அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த ரிசர்வ் வங்கி, ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறும் நடவடிக்கை பணமதிப்பிழத்தல் இல்லை. மாறாக இது செயல்முறை வசதிக்காக மேற்கொள்ளப்படும் ஒரு சட்டப்பூர்வ நடவடிக்கையே என்று தெரிவித்திருந்தது.

திரும்பப் பெறும் நடவடிக்கை: கடந்த மே 19ம் தேதி ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன்படி மே 23-ம் தேதி முதல் செப்.30 வரை பொதுமக்கள் வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். நாளொன்று ரூ.20,000 மதிப்பிலான நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.