அகமதாபாத்: ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி 200 ரன்களுக்குள் கட்டுப்படித்திவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரன்களை வாரி வழங்கிவிட்டது. இதனால், கொஞ்சம் ஏமாற்றம் அடைந்த சென்னை ரசிகர்கள் ஜாலியாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போட்டி குறித்து உரையாடி வருகின்றனர்.
16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
ஏற்கனவே பிளே ஆப் சுற்றில் குஜராத் அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த போட்டியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற முதலில் பந்துவீச்சை தோனி தேர்வு செய்தார். ஏனெனில் வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட குஜராத் அணி எவ்வளவு பெரிய இலக்கு என்றாலும் சேஸ் செய்ய வாய்ப்பு உள்ளதால் முதலில் பேட்டிங் ஆட வைத்து கட்டுப்படுத்தி விடலாம் என்பது தோனியின் கணக்காக இருந்தது.
சுப்மான் கில் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாய் சுதர்சன் பின்னி பெடலெடுத்தார். அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் 96 ரன்கள் குவித்தார். இதனால், குஜராத் அணியின் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 200 ரன்களுக்குள் அந்த அணியின் ரன் வேகம் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் குஜராத் அணி 214 ரன்கள் எடுத்து இமாலய இலக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து பேட்டிங்கை துவக்கிய சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டும் கான்வேயும் இறங்கினர். முகம்மது ஷமி முதல் ஓவரை வீசினார். வெறும் மூன்று பந்துகளே வீசப்பட்ட நிலையில் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சீரியசான விஷயங்களையே ஜாலியாக பதிவிட்டு கலகலப்பாக மாற்றும் நெட்டிசன்கள் இந்த ஐபிஎல்லை விட்டு வைப்பார்களா என்ன?
அதிலும் சென்னை ரசிகர்கள் இவ்வளவு பெரிய இலக்கை சேஸ் செய்து விடுமா? என்ற சந்தேகத்துடன் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இதனிடையே, போட்டிக்கு மழை இடையூறு ஏற்படுத்தும் என்பதை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் அப்டேட் கொடுத்துக் கொண்டே இருந்தார். அப்போது மழை மேகங்கள் அகமதாபாத் மைதானத்தை நோக்கி செல்லும் செயற்கை கோள் படங்களையும் பதிவிட்டு இருந்தார்.

இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், “அதை நல்லா பாருங்க சார்.. மழை மேகமா சென்னை ரசிகர்களின் கண்ணீர் மேகமா” என கிண்டலாக பதிவிட்டுள்ளார். இதுபோல நெட்டிசன்கள் பலரும் ஜாலியாக பதிவிட்டு வருகின்ரனர்.