அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிக்க ராகுல் காந்தி தயங்குவது ஏன்?! – டெல்லி அரசியல் பின்னணி

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு துணை நிலை ஆளுநராக இருப்பவர் வினய் குமார் சக்சேனா. இவருக்கும் மாநில அரசுக்கும் இடையில் நீண்ட நாள்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது.

வினய் குமார் சக்சேனா,அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த பிரச்னை ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் வெடித்தது. இதையடுத்து ‘மாநில நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது’ என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது.

அதில், “டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க, இடமாற்றம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுக்கே முழு அதிகாரம் இருக்கிறது. அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகி விடும்” என தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்றம்

இந்த தீர்ப்பு வெளியான சில மணி நேரத்திலேயே சேவைகள் துறை செயலாளர் ஆஷிஷ் மோரை இடமாற்றம் செய்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். ஆனால் அதற்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா ஒப்புதல் அளிக்கவில்லை.

பின்னர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையே நீர்த்துப்போகும் செய்யும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அதில், “பணி நியமனம், இடமாற்றம் தொடர்பாக முடிவு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை முதன்மை செயலாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆம் ஆத்மி.

இவர்களில் பெரும்பான்மை முடிவின்படி பணி நியமனம் மற்றும் இடமாற்றம் முடிவுகள் இருக்கும். ஒருமித்த முடிவு ஏற்படாவிட்டால் துணை நிலை ஆளுநர் எடுக்கும் முடிவே இறுதியானது” என கூறப்பட்டிருக்கிறது. இதற்கு குடியரசு தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்கியதால், இந்த சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது.

இது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் இந்த அவசரச் சட்டத்தை கருப்புச் சட்டம் என அந்த கட்சி கடுமையாக விமர்சனம் செய்தது. மறுபுறம் இதனை நிரந்தர சட்டமாக கொண்டுவர பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மக்களவையில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இருக்கிறது.

மம்தா பானர்ஜி

எனவே மாநிலங்களைவையில் எதிர்க்கட்சிகளின் உதவியோடு அதை தோற்கடிக்க அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக எதிர்க்கட்சி தலைவர்களின் ஆதரவை கோரி வருகிறார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, தேசிவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரைச் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார்.

அதன் ஒருபகுதியாக காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவையும், ராகுல் காந்தியையும் சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை தேதி ஒதுக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. எனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் தயக்கம் கட்டுவதன் பின்னணி என்ன? என்பது குறித்த கேள்வி எழுகிறது.

ப்ரியன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். “இந்த சட்டம் மாநில அரசின் உரிமைகளை பறிக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இதையடுத்து கெஜ்ரிவாலுக்கு எதிர்க்கட்சி தலைவர்களான மம்தா பானர்ஜி, சரத் பவார் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து விட்டார்கள். மக்களவையில் காங்கிரஸின் ஆதரவு ஆம் ஆத்மிக்கு தேவை. அதனால் தான் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க கெஜ்ரிவால் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மேலும் அவர்கள், “பாஜகவின் பி டீம் தான் ஆம் ஆத்மி, காஷ்மீரில் 370 சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார், டெல்லி மற்றும் பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு ஆம் ஆத்மி தான் காரணம். அவருக்கு அவசரம் என்பதால் தான் நம்மை தேடுகிறார். எனவே ஆதரவு தெரிவிக்க வேண்டாம்” என்று தான் சொல்கிறார்கள்.

காங்கிரஸ்

இதனால் டெல்லி காங்கிரஸை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில் மேலிடம் இருக்கிறது. 2024 தேர்தலில் அப்படி இருக்க முடியாது. எனவே அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது. இந்த பேச்சுவார்த்தை நடந்து வருவதால் தான் கெஜ்ரிவாலுக்கு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை.

டெல்லி காங்கிரஸை சமாதான படுத்திய பிறகு தான் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்வார்கள். இல்லை என்றால் பிளவு ஏற்பட்டு விடும். நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் இருப்பதால் பொறுமையாக தான் காங்கிரஸ் முடிவு செய்யும். இதேநிலை தான் மேற்கு வங்கத்திலும் இருக்கிறது. அங்கு இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் தலைமை மம்தாவிடம் நட்பு வைத்துக்கொள்ள கூடாது என்று தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் கூட ஆளும் கட்சியான மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை காங்கிரஸ் வேட்பாளர் வீழ்த்தி இருந்தார். இது திரிணாமூல் காங்கிரஸ் மத்தியில் காங்கிரஸ் மீது கோபத்தை ஏற்படுத்தியது. என்றாலும் பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை சொல் தான் 2024-ம் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை. இதெல்லாம் காங்கிரஸ் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்கொள்ள இருக்கும் சவால்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.