மதுரை: உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் இன்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பஞ்சமி நிலத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் கருமாத்தூர் ஊராட்சி புல எண்:229/2-ல் 3 ஏக்கர் நிலம் ஆதிதிராவிடர் மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக ஒதுக்கிய பஞ்சமி நிலமாக இருந்தது. இதனை 2005-ல் உசிலம்பட்டி கோட்டாட்சியர் பஞ்சமி நிலம் என்பதை மாற்றி ‘தீர்வு ஏற்பட்ட அரசு தரிசு நிலம்’ என உத்தரவிட்டார். ஆதிதிராவிடர்களுக்கு வழங்கிய பஞ்சமி நிலத்தை அரசு தரிசு நிலம் என மாற்றி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பஞ்சமி நிலமாக மாற்றி வீடு இல்லாத ஏழை ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கருமாத்தூரில் விவசாயத் தொழிலாளர் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பஞ்சமி நிலத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக உசிலம்பட்டி வட்டாட்சியர் மற்றும் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து கலைந்து சென்றனர். இதில், மாவட்ட தலைவர் ஜெ.காசி, மாவட்ட செயலாளர் வி.உமாமகேஸ்வரன், துணைச் செயலாளர் சொ.பாண்டியன், ஒன்றிய தலைவர் ரவி, பொருளாளர் முனியாண்டி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.