என்.டி.ராமா ராவ் நூற்றாண்டு பிறந்தநாள்

ஆந்திராவில் என்.டி.ஆர். முதல்வராக இருந்தபோது 'கான்க்ளேவ்' எனும் தேசிய எதிர்க் கட்சித் தலைவர்கள் மாநாட்டை விஜயவாடாவில் நடத்தினார். தினமலர் சிறப்புச் செய்திகள் எழுத கதிர்வேலும் நானும் (ஆர்.நூருல்லா) செய்திப் புகைப்பட நிபுணர் கே.விஸ்வநாதனும் சென்றோம். விஜயவாடா….எங்களை, “விஜயம் செய்ய வாடா” என அழைத்தது. அப்போது நிருபர் கூட்டத்தில் நான் என்.டி.ஆருடன் நேருக்கு நேர் உரையாடிய காட்சியே உள்ளூர் நாளிதழ்களில் பிரசுரம் ஆனது. அதன் பிரதி என் சேமிப்பில் உள்ளது. அதைத் தான் கீழே பார்க்கிறீர்கள்.

ஆந்திர மாநிலத்தில், கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்குத் தண்ணீர் வழங்கும் திட்டத்தை, எம்ஜிஆரின் வேண்டுகோளையடுத்து உதவி செய்ய அப்போதைய ஆந்திர மாநில முதல்வர் என்டி ராமராவ் முன்வந்தார். அவரின் அருள் காரணமாக, உச்சபட்ச மெச்சுதலோடு அவருக்கு எம்.ஜி.ஆர் பாராட்டு விழா நடத்தினார். அப்போதைய ஒரு நிகழ்ச்சியின் போது மேடையில் எம்ஜிஆர் அமர்ந்திருக்க, என்டி ராமராவ் பேசினார். அவரின் உரையை அவ்வை நடராசன் மொழி பெயர்த்துக் கூறினார். எம்ஜிஆரை மேடையில் வைத்துக்கொண்டு என்டி ராமராவ் பேசிய போது ஆங்கிலத்தில், “கிங் மேக்கர் ஆப் சவுத் இந்தியா” என எம்ஜிஆரைப் பற்றிக் குறிப்பிட்டார். இதனைத் தமிழாக்கிய அவ்வை நடராசன், “தென்னகத்தின் மன்னாதி மன்னனே! ” என்றார். அந்த ஒற்றை வாசகமே எம்ஜிஆரை முற்றிலுமாக ஈர்த்துவிட்டது.

“மன்னாதி மன்னன்” என்ற பெயரிலான படத்தில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் அமோக அபிமானத்தைப் பெற்றவர் எம்ஜிஆர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விழாவில் அவ்வை நடராசன் மீது எம்ஜிஆருக்கு ஏற்பட்ட அன்பு காரணமாக அவரின் ஆட்சிக்காலம் முழுவதும் அவ்வை நடராசன் செல்வாக்கின் சிகரத்தில் இருக்கும்படியான வாய்ப்புகள் உருவாகின. என்டி ராமராவ் தெலுங்கு தேசம் கட்சியைத் துவங்குவதற்குக் கட்சிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வதிலிருந்து அரசியலின் அனைத்து அஸ்திரங்களையும் அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக, அடிப்படை அம்சங்கள் அனைத்தையும் கற்றுத் தந்தவர் எம்ஜிஆர் தான். ஆகவே ஒவ்வொரு மேடையிலும், “எம் ஜி ஆர் தான் என் குரு” என்று நன்றி உணர்வோடு குறிப்பிட என்டி ராமராவ் தவறியதே கிடையாது.
தெலுங்கு தேசம் கட்சியை என்டிஆர் துவங்கிய போது, கட்சிக்கான தேர்தல் சின்னத்தை முடிவு செய்ய முயல்கையில் சைக்கிள் சின்னத்திற்கான அடையாளத்தை அருதியிட்டு காட்டியவரும் எம்ஜிஆர் தான். அத்தோடு நின்றாரா? சென்னையில் உள்ள டிஐ சைக்கிள்ஸ் நிறுவனத்தாரிடமிருந்து ஆயிரக்கணக்கான சைக்கிள்களை விலைக்கு வாங்கி, அவற்றைத் தன் அன்புப் பரிசாக என்டி ராமராவுக்கு அனுப்பி வைத்தார். அவற்றை வைத்துத் தான் என்டி ராமராவ் தன் கட்சியின் சின்னத்தைப் பிரபலப்படுத்தினார். சைக்கிள் பேரணிகளை அடுத்தடுத்து நடத்தி, மக்களின் இதயங்களில் தன் கட்சி சின்னத்தைப் பதியவைத்தார்.

தெலுங்கில் “ராமுடு பீமுடு” என்ற படத்தில் என்டி ராமராவ் நடித்து பிரமாண்டமான வெற்றியை ஈட்டினார். அதே படக் கதை தான் தமிழில் எம் ஜி ஆர் நடித்து, தமிழக மக்களையே தன் நடிப்பால் வசீகரித்து, வசப்படுத்திக்கொண்ட “எங்க வீட்டு பிள்ளை” படமாகும்.
என்டி ராமராவ் நடிப்புத் துறையில் மட்டும் இருந்த காலகட்டத்தில், அவருக்கு சென்னையில் ஒரு வீடு இருந்தது. அங்கு வசித்தபடி தான் அவர் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். அந்த காலகட்டத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பல்வேறு ஹிந்தி படங்களும் சென்னையில் தான் எடுக்கப்பட்டு வந்தன. “சிறப்புக்கும் சிக்கனத்துக்கும் சென்னையே உகந்தது” என்பது இந்திய சினிமா உலகச் சித்தாந்தம். எனவே தென்னகத்தின் பெரும்பாலான நடிகர் நடிகையர் சென்னையில் தான் வாசம் புரிந்து வந்தனர். அந்த சூழலில் என்டி ராமராவ் வசித்து வந்த ராயப்பேடடை வீடு ஒரு சர்ச்சையில் சிக்கி விட்டது. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகரின் ஆதிக்கத்தில் அந்த வீடு இருந்த நிலையில், அதனை மீட்டெடுக்கும் முயற்சிகளில் என்டி ராமராவ் சோர்ந்து போனார்.

ஒரு நாள் இந்த தகவலை அவர் தற்செயலாக எம்ஜிஆர் இடம் தெரிவித்தார். அப்போது முதல்வராக இருந்த எம் ஜி ஆர் உடனடி நடவடிக்கை எடுத்தார். அந்த வீடு என்டி ராமராவுக்கு மீட்டுத் தரப்பட்டது. இவ்வாறாக எம்ஜிஆருக்கும் என் டி ஆருக்கும் இடையிலான நெருக்கத்தையும் உருக்கமான பழக்கத்தையும் குறிப்பிடுவதற்கு ஏராளமான அம்சங்கள் உண்டு. எனினும் அவற்றை மற்றொரு பதிவிற்கு விட்டு வைத்தவனாக என்டி ராமராவ் நினைவுகளில் நெஞ்சை நிலை நிறுத்திக் கொள்கிறேன். என்டி ராமாராவின் நூற்றாண்டு விழாவையொட்டிய இந்த நாளில் அவரின் நினைவைப் போற்றுகின்ற வகையில் இந்த பதிவை வெளியிடுகிறேன்.

-ஆர்.நூருல்லா, ஊடகவியலாளர்
9655578786

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.