பெங்களூருவில் நிதி ஒதுக்கியும் தொடங்காத பணிகளை நிறுத்த வேண்டும்; அதிகாரிகளுக்கு, டி.கே.சிவக்குமார் உத்தரவு

பெங்களூரு:

பெங்களூருவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதுவரை தொடங்காத பணிகளை நிறுத்தும்படி அதிகாரிகளுக்கு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டு உள்ளார்.

நிதி ஒதுக்கீடு

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தனது துறையான பெங்களூரு நகர வளர்ச்சி குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் மாநகராட்சியின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

பெங்களூருவில் கடந்த 3 ஆண்டுகளில் தொகுதி வாரியாக நடைபெற்ற பணிகள், எந்த திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றுள்ளது, அதற்கு ஆகியுள்ள செலவுகள் குறித்து உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். பெங்களூரு மாநகராட்சி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதுவரை தொடங்காத பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். குறித்த காலத்திற்குள் நிறைவடையாத பணிகளையும் நிறுத்த வேண்டும்.

பணம் பட்டுவாடா

எந்தெந்த பணிகளுக்கு, பணிகள் நடைபெறாவிட்டாலும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது, ஒரே பணிக்கு இரண்டு முறை பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. ஒரே பணிக்கு இரண்டு நிறுவனங்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதிகாரிகள் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

திட்ட பணிகள் நடைபெறும் பகுதிகளுக்கு நேரில் சென்று நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும். கண்களில் பார்க்க கூடிய விஷயங்கள் மட்டுமே நம்பகத்தன்மை கொண்டது. சாலை உள்ளிட்ட பணிகளை பிற ஏஜென்சிகள் மூலம் செய்வதாக இருந்தால், மாநகராட்சியில் என்ஜினீயர்கள் எதற்காக இருக்க வேண்டும்?. உங்களின் பணிகளை வேறு யாரோ செய்வதாக இருந்தால், நீங்கள் எதற்காக இருக்கிறீர்கள்?.

பாதுகாப்புக்கு முன்னுரிமை

பெங்களூரு புறநகர் சாலைகளில் கண்ட இடங்களில் குப்பைகளை வீசுவதை அனுமதிக்க கூடாது. கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுகிறவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும். தூய்மை, சுகாதாரம், ஆரோக்கிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். எந்த தவறும் நடைபெறாமல் இருக்க டி.டி.ஆர். திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

சாலை உள்ளிட்ட அரசின் திட்ட பணிகளுக்காக கையகப்படுத்தப்படும் சொத்து உரிமையாளர்களின் நலனை காக்க வேண்டும். எந்த விதமான திட்ட பணியாக இருந்தாலும், பணிகள் தொடங்குவதற்கு முன்பு அந்த இடத்தை புகைப்படங்கள், வீடியோ எடுக்க வேண்டும். மழைநீர் எளிதாக செல்ல முடியாத இடங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாற்றங்கள் செய்யப்படும்

பெங்களூரு கடல் போன்றது. எந்த பகுதி மூழ்கும், எந்த பகுதி மிதக்கும் என்பது தெரியாது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் சேர்ந்து கொண்டு என்ன செய்கிறார்கள் என்பது தெரியும். பெங்களூரு நமது நாட்டின் சொத்து. மந்திரி தெரியும், எம்.எல்.ஏ. தெரியும் என்று கூறிக்கொண்டு சுற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்.

நேர கட்டுப்பாடு இன்றி நீங்கள் உழைக்க வேண்டும். 100 சதவீத அர்ப்பணிப்பு, நேர்மையுடன் பணியாற்ற வேண்டும். நிர்வாகத்திற்கு சுறுசுறுப்பு வழங்க சில மாற்றங்கள் செய்யப்படும். யார்-யார் எவ்வளவு ஊழல் செய்தனர் என்பது எனக்கு தெரியும். நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த அரசு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற எண்ணம் மக்களுக்கு வர வேண்டும். இதன் மூலம் அரசுக்கு நற்பெயர் கிடைக்க வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.