தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாரயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றுக்கு முழுப் பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, அ.தி.மு.க தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில் ரயிலடியில், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஆர்.காமராஜ், “விடியா தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்புகிற ஆர்ப்பாட்டம் இது. பலர் அ.தி.மு.க-வை அழித்துவிடலாம் என நினைத்தார்கள். எந்தக் கொம்பனாலும் இந்த இயக்கத்தை அழிக்க முடியாது.
அது இந்த ஊரிலுள்ள கொம்பனாக இருந்தாலும் சரி. யாரும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலிதாவுக்கு வாரிசுகள் கிடையாது. அ.தி.மு.க-வின் தொண்டர்கள்தான் அவர்களுடைய வாரிசுகள். அவர்கள் வழியில் அ.தி.மு.க-வின் மூன்றாம் தலைமுறையாகக் கட்சியை எடப்பாடி பழனிசாமி வழி நடத்திக்கொண்டிருக்கிறார். அம்மா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க வாழுமா, வளருமா… இனி யார் இருக்கிறார்கள் என பலர் எத்தனையோ கேலி, கிண்டல் செய்தனர். சேப்டர் முடிந்தது என்றனர். அப்போது அ.தி.மு.க-வைக் காப்பாற்றுவதற்கு எடப்பாடி வந்தார்.
நான்கு ஆண்டுக்காலம் ஆட்சி நடத்தி ஜம் என்று முதலமைச்சராக இருந்தார். தஞ்சாவூரில் ஜெயலலிதாவுக்குப் பொன்னியின் செல்வி, திருவாரூரில் எடப்பாடிக்கு காவிரி காப்பாளன் பட்டம் கொடுத்தோம். எம்.ஜி.ஆர், தி.மு.க-வை தீயசக்தி என்றார். தி.மு.க-வை எதிர்ப்பவர்தான் அ.தி.மு.க-வில் பொதுச்செயலளாரக இருக்க முடியும். தி.மு.க ஆட்சிக்கு துணை போகிறவர்கள் தலைவராக இருக்க முடியுமா… அ.தி.முக-வைக் காட்டிக் கொடுத்தவர்கள் தற்போது தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள்.
தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் வேலி சண்டை கிடையாது. அரசியல்ரீதியாக இருகட்சிகளும் எதிர்க்கட்சிகள். திட்டமிட்டே தி.மு.க-வை ஆதரித்த காரணத்தால் ஓ.பி.எஸ் போன்றவர்கள் வெளியேற்றப்பட்டனர். சாதரண மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் அ.தி.மு.க வலிமையோடு இருக்க வேண்டும். ஸ்டாலின் அரசில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. ஸ்டாலின் அரசு ஃபெயிலியர் ஆகிவிட்டது. எல்லாவற்றிலும் தோற்றுப்போன ஆட்சியாக இருக்கிறது.
கள்ளச்சாரயத்தால் பத்து நாள்களில் 25 பேர் இறந்திருக்கின்றனர். எந்த ஆட்சியிலாவது இப்படி நடந்திருக்கிறதா… அதனால்தான் தி.மு.க அரசு பதவி விலக வேண்டும் என்கிறோம். குவார்ட்டருக்கு ரூ.10 அதிகம் வாங்குகின்றனர். பத்தரை மணிக்கு கடை திறக்கக் கூடாது என்ற சட்டம் இருக்கிறது. அதற்கு முன்பு பாரில் மது வாங்கிக் குடித்த இரண்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் சயனைடு கலந்து குடித்ததே இறப்புக்குக் காரணம் என்கிறார்.
சயனைடு கலந்த மது, சாராயம் குறித்து இதுவரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா… தி.மு.க ஆட்சிக்கு கெட்டப்பெயர் என்றால் சயனைடு மட்டுமல்ல எல்லாம் வரும். ஆட்சிக்கு கெட்ட நேரம் வந்துவிட்டது. சாதரண மக்களுக்காக தி.மு.க ஆட்சி நடப்பதில்லை. ஒரு குடும்பத்துக்கான ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. எனவே சாராய சாவுக்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலினும், அந்தத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் பதவி விலக வேண்டும்.
இரண்டு வருடங்களில் ரூ.30,000 கோடி கொள்ளையடித்திருக்கின்றனர். உதயநிதியும், சபரீசனும் அந்தப் பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றனர் என அவர்களுடைய அமைச்சர் பி.டி.ஆர் சொல்லியிருக்கிறார். உண்மையைச் சொல்லிவிட்டார் என்ற கோபத்தில் அவரின் இலாகாவை மாற்றிவிட்டனர்.
இந்த ஊழலுக்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும், ஆட்சியை விலக்கிக் கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம், அராஜகம் நடக்கும். தஞ்சாவூரில் நாம் கொடுக்கின்ற குரல் தமிழகத்தை உலுக்க வேண்டும்” என்றார்.