2023 ஐந்து மாதத் தமிழ் சினிமா – அசத்தலா… அதிர்ச்சியா..

2023ம் ஆண்டின் ஐந்து மாதங்கள் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளது. இந்த ஐந்து மாதங்களில் தமிழில் சுமார் 90 படங்கள் வரை வெளிவந்துள்ளன. அரையாண்டுக்குள்ளாகவே இவ்வளவு படங்கள் வெளிவருவது பெரிய விஷயம்தான். ஆனால், அந்த 90 படங்களில் 9 படங்கள் கூட வெற்றிப் படங்களாக அமையவில்லை என்பது வருத்தமான விஷயம். கடந்த சில பல வருடங்களாகவே இப்படித்தான் நடந்து வருகிறது. ஒரு வருடத்திற்கு 200 படங்கள் வரை வெளிவந்தால் மாபெரும் வெற்றி, வெற்றி, சுமாரான வெற்றி என அதிகபட்சமாக 20 படங்கள் வரைதான் தேறுகிறது.

ஆரம்பம் அமர்க்களம்
இந்த வருடத்தின் முதல் பெரிய வெளியீடாக பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய படங்கள் வெளிவந்தன. 'வாரிசு' படம் 300 கோடி வசூலித்தது என்றும், 'துணிவு' படம் 200 கோடி வசூலித்தது என்றும் செய்திகள் வெளிவந்தன. ஆனாலும், இரண்டு படங்களும் நஷ்டத்தைத் தந்தது என்று செய்திகள் வரவில்லை. அதனால், இரண்டு படங்களுமே ஓரளவிற்காவது லாபத்தைக் கொடுத்திருக்கும் என்பதுதான் உண்மையாக இருக்கும். அதேசமயம், 'வாரிசு' படத்தை விடவும் 'துணிவு' படம்தான் அதிக லாபத்தைக் கொடுத்தது என்பது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களின் தகவலாக இருந்தது.

அடுத்து தனுஷ் நடித்து தமிழ், தெலுங்கில் இரு மொழிப் படமாக வெளிவந்த 'வாத்தி' படம் தமிழில் 50 கோடிக்கு அதிகமாகவும், தெலுங்கில் 100 கோடிக்கு அதிகமாகவும் வசூலித்ததாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேரடி தெலுங்குப் படத்தில் அறிமுகமான தனுஷ், அங்கு முதல் படத்திலேயே தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

கவனம் ஈர்த்த சிறு பட்ஜெட் படங்கள்
அடுத்து, யாரும் எதிர்பார்க்காத விதத்தில் சிறிய பட்ஜெட் படங்களான 'டாடா, அயோத்தி' ஆகிய படங்கள் ரசிகர்களைக் கவர்ந்த படங்களாக அமைந்தன. கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் கணேஷ் கே பாபு இயக்கிய 'டாடா' படம் காதலும், குடும்ப சென்டிமென்ட்டும் கலந்த படமாக அமைந்து ரசிக்க வைத்தது. சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த 'அயோத்தி' படம் அடுத்தவருக்கு உதவி செய்யும் எண்ணத்தை வலியுறுத்தும் படமாக வந்து நெகிழ வைத்தது.

அடுத்து வந்த படங்களில் விமர்சன ரீதியாக அதிக வரவேற்பைப் பெற்ற படமாக 'விடுதலை' படம் அமைந்தது. வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த முதல் படம். விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே தினத்தில் வெளிவந்த 'பத்து தல' படம் பரபரப்பாகப் பேசப்படவில்லை என்றாலும் சுமாரான வெற்றியைப் பெற்ற படமாக இருந்தது.

புதுமு நடிகர்கள், நடிகைகள் நடித்த 'யாத்திசை' படம் வியாபார ரீதியாக பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக யார் இவர்கள் என்ற கேள்வியை எழுப்பியது. ஒரு சரித்திரப் படத்தை சிறப்பானதொரு பதிவாகக் கொடுத்திருந்தார்கள். ஒரு சில தெரிந்த முகங்கள் அப்படத்தில் நடித்திருந்தால் ரசிகர்களிடம் வெகுவாகப் போய்ச் சேர்ந்திருக்கும்.

முறியடிக்கப்படாத 2.0 சாதனை

கடந்த வருடம் வெளிவந்து 500 கோடி வசூலைக் குவித்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் வெளிவந்தது. முதல் பாகத்தை விடவும் அதிகம் பேசப்படும், அதைவிட அதிக வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்தது. இரண்டாம் பாகத்தில் கதாபாத்திரங்களின் முடிவுகளை ரசிகர்கள் ஏற்கவில்லை என்பது படத்திற்குக் கிடைத்த வரவேற்பிலிருந்தும், வசூலிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். 300 கோடி வசூலைக் கடந்ததாக அறிவிக்கப்பட்ட படம் இப்போது ஓடிடியில் பணம் செலுத்தி பார்க்கும் முறையில் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படம்தான் தமிழ் சினிமாவில் 600 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்த படம். அந்த சாதனையை 'பொன்னியின் செல்வன் 2' முறியடிக்காமல் போனது நாவல் வாசகர்களுக்கும், படத்தைச் சார்ந்த குழுவினரின் ரசிகர்களுக்கும் ஏமாற்றமாகவே அமைந்தது.

குட் சொல்ல வைத்த குட் நைட்
இந்த கோடை விடுமுறையில் வெளிவந்த படங்களில் சிறிய பட்ஜெட் படமான 'குட் நைட்' ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 'டாடா, அயோத்தி' படங்களைப் போன்றே இந்தப் படத்திலும் மாறுபட்ட கதையம்சம், அனைவரின் ஈடுபாடும் படத்தைப் பற்றிப் பேச வைத்தது. புதிய கதை, புதிய காட்சிகள், இயல்பான நடிப்பு ஆகியவை இருந்தால் யார் நடிகர் என்பதை ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள், ஆதரவு கொடுப்பார்கள் என்பதை இப்படம் மீண்டும் புரிய வைத்துள்ளது.

பொதுவாக ஒவ்வொரு வருடமும் தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு ஆரம்பமாகும் கோடை விடுமுறைக் காலம் சினிமாவுக்கு மிக முக்கியமான பட வெளியீட்டுக் காலம். அந்த சமயங்களில் ரசிகர்களைக் கவரும் படங்கள் வெளிவந்தால் அவை சுலபமாக வசூலைப் பெற்றுவிடும். ஆனால், இந்த வருடக் கோடை விடுமுறையில் வசூல் ரீதியாக 'பொன்னியின் செல்வன் 2', படமும், விமர்சன ரீதியாக 'யாத்திசை, குட் நைட்' ஆகிய படங்களும் சாதித்துள்ளன.

ஏமாற்றம் தந்த படங்கள்
கடந்த ஐந்து மாதங்களில் வெளியான படங்களில் எதிர்பார்த்து ஏமாற்றத்தைத் தந்த படங்கள் என ஒரு சில படங்கள் உள்ளன. மலையாளத்தில் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'த கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை அதே பெயரில் ரீமேக் செய்தார்கள். ஆனால், இங்கு வரவேற்பையே பெறவில்லை. பிரபுதேவா நடித்த 'பஹிரா', ஜெயம் ரவி நடித்த 'அகிலன்', ராகவா லாரன்ஸ் நடித்த 'ருத்ரன்', நாக சைதன்யா நடித்த 'கஸ்டடி' ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன.

தமிழ் சினிமாவின் கிளாசிக் நகைச்சுவை படமான 1972ல் வெளிவந்த 'காசேதான் கடவுளடா' படத்தை அதே பெயரில் ரீமேக் செய்து சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்கள். அப்படி ஒரு படம் வந்ததே பலருக்கும் தெரியவில்லை. கடந்த ஐந்து மாதங்களில் வந்த 'தமிழ் ரீமேக்' படம் இது ஒன்றே. இப்படி கிளாசிக் படங்களைத் தயவு செய்து ரீமேக் செய்யாதீர்கள் என ரசிகர்கள் புலம்புகிறார்கள்.

கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக ஓடிடி தளங்களில், நேரடியாக சில படங்கள் வெளியாகின. ஆனால், இந்த ஆண்டில் இதுவரையில் 'புர்கா, மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' ஆகிய இரண்டே படங்கள் மட்டுமே வெளியாகின.

2023ன் இந்த ஐந்து மாதங்கள் ஓரிரு அசத்தல்களுடனும், பல அதிர்ச்சிகளுடனும்தான் முடியப் போகிறது. ஆனாலும், அடுத்த வர உள்ள எஞ்சிய ஏழு மாதங்களில் எண்ணற்ற படங்கள் வரப் போகின்றன. அவற்றில் சில பல முக்கிய படங்களும் உள்ளன. அதனால், அடுத்த ஏழு மாதங்கள் ஏற்றத்தைத் தரும் என உறுதியாக நம்பலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.