10-ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் அதிரடி மாற்றம்.. பல பாடங்கள் திடீர் நீக்கம்.. என்ன நடக்கிறது?

சென்னை:
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் பல அதிரடி மாற்றங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) செய்துள்ளது. அறிவியல், சமூக அறிவியல் புத்தகங்களில் இருந்து பல பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பாடங்கள் ஏன் நீக்கப்பட்டன? என கல்வியாளர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

கோடை விடுமுறை முடிந்து இன்னும் ஒரு வாரக்காலத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. சிபிஎஸ்இ பள்ளிகளும் திறக்கப்பட இருக்கின்றன.

இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக திடீரென சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் பல மாற்றங்களை என்சிஇஆர்டி செய்துள்ளது. அந்த வகையில், பல பாடங்களை 10-ம் வகுப்பு பாடப்புத்தங்களில் இருந்து நீக்கியுள்ளது.

அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து வேதித் தனிமங்களின் அட்டவணை (periodic table) என்ற பாடம் நீக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை (Environmental Sustainability) என்கிற பாடமும் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல, சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து ஜனநாயகத்தின் சவால்கள், அரசியல் கட்சிகள் ஆகிய பாடங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.

கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக, மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் இந்தப் பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டிருப்பதாக என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் 9 மற்றும் 10-ம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து டார்வினின் ‘பரிணாம வளர்ச்சி’ என்ற பாடத்தை நீக்க என்சிஇஆர்டி முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், என்சிஇஆர்டி-இன் இந்த நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேதியியலின் அடிப்படையான வேதித் தனிம அட்டவணைகளை நீக்கிவிட்டு எப்படி வேதியியல் பாடத்தை நடத்த முடியும்? என அவர்கள் கேள்வியெழப்புகின்றனர். அதேபோல, மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஜனநாயகம் குறித்த பாடங்களை நீக்கியதற்கு பின்னால் இருக்கும் உள்நோக்கம் என்ன? என்றும் அவர்கள் வினவுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.