ஒடிசாவில் தொடரும் \"சோகம்..\" பிணவறைகளில் கூட இடமில்லை.. குளிரூட்டப்பட்ட வேன்களில் குவியும் உடல்கள்

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ரயில் விபத்தால் உயிரிழந்தோரின் உடல்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் வரை பாதுகாப்பாக வைப்பதே இப்போது பெரிய சவாலாக இருக்கிறது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடந்த ஒடிசா ரயில் விபத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட மாட்டார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலின் பின்புறம் மோதி தடம் புரண்டது. சில நிமிடங்கள் கழித்து வந்த ஹவுரா ரயிலும் இந்த விபத்தில் சிக்கியது.

ரயில் விபத்து: இப்படி மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியதே இதை மோசமான ஒரு விபத்தாக மாற்றியுள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் மட்டுமே பல மணி நேரம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இப்போது ரயில் விபத்து நடந்த இடத்தில் பழையபடி ரயில் சேவை ஆரம்பித்துவிட்டது. ஆனால், ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எதுவும் இன்னும் பழையபடி திரும்பவில்லை.

இந்த கொடூர விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், கிட்டதட்ட 1000 பேர் இதில் படுகாயமடைந்தனர். அவர்களில் சுமார் 800 பேர் வீடு திரும்பிவிட்ட நிலையில், மற்றவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சுமார் 50 பேரின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

83 உடல்கள்: இந்த விபத்தில் கண்டறியப்பட்ட பெரும்பாலான உடல்கள் புவனேஸ்வருக்கு கொண்டு செல்லப்பட்டன. அதில் பெரும்பாலான உடல்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. இருப்பினும் இன்னுமே 83 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. அங்கே புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் பிணவறைகளில் உடல்களை வைக்கக் கூட இடமில்லையாம்.

இதையடுத்து சில உடல்களை புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட டிரக்குகளில் வைக்க வேண்டிய சூழலுக்கு ரயில்வே அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் யார் என அடையாளம் கண்டு தொடர்புடைய குடும்ப உறுப்பினருக்கு உடல்களை ஒப்படைக்கும் வரை உடல் அழுகக் கூடாது. இதன் காரணமாகவே உடலைக் குளிரூட்டப்பட்ட இடங்களில் பதப்படுத்தி வைப்பது அவசியமாகிறது.

வேண்டுகோள்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா ஆகியோர் தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்களை அடையாளம் காண மக்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் சரியான உடல்கள் சரியான நபரிடம் ஒப்படைக்கப்படுவதை உறுதிசெய்ய டிஎன்ஏ சோதனைகளும் செய்யப்படுகின்றன.

மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் உயிரிழந்தோரின் குடும்பங்களையும் தொடர்பு கொண்டு தகவல்களைச் சேகரிக்குமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், சட்ட நடவடிக்கைகள் முழுமையாக முடியும் வரை சடலங்களைப் பாதுகாப்பது சவாலானது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயன் தராது: சேதமடைந்த உடல்களை அதிக நாட்கள் பாதுகாத்து வைப்பது நல்லது அல்ல என்றும் எம்பாமிங் செய்தால் கூட சேதமடைந்த உடல்களைப் பாதுகாப்பாக வைக்க முடியாது என்றும் எய்ம்ஸ் மருத்துவ வல்லுநர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த 12 மணி நேரத்திற்குள் எம்பாமிங் செய்தால் மட்டுமே உடலைப் பல ஆண்டுகளாகப் பாதுகாக்க முடியும். இப்போது விபத்து நடந்தே சில நாட்கள் ஆகிவிட்டதால் எம்பாமிங் செய்வது பயன் தராது.

இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு ரயில்வே துறை பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.