ஒரு சிமென்ட் சாலைக்கு இரண்டு திறப்பு விழா – இது திருவண்ணாமலை விநோதம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகராட்சி கடம்பராயன் தெருவில் போடப்பட்ட சிமென்ட் சாலைக்கு இரண்டு திறப்பு விழா நடைபெற்றுள்ளது மக்களிடையை சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவண்ணாமலை நகராட்சி 16-வது வார்டில் உள்ள கடம்பராயன் தெருவில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. நகராட்சி மூலம் ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டன. மக்களின் பங்களிப்பாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டன.

16-வது வார்டு கவுன்சிலரான அதிமுகவைச் சேர்ந்த சந்திர பிரகாஷின் முயற்சியால், வர்த்தக வீதிகளில் முக்கியத்துவம் பெற்ற கடம்பராயன் தெருவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது. தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை சேகரிக்கவும் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

சிமென்ட் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான திறப்பு விழா நேற்று(ஜுன் 5-ம் தேதி) நடைபெற்றது. அதிமுக கவுன்சிலர் வார்டு என்பதால், அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், போளூர் சட்டப்பேரவை உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார். இதன்பிறகு, மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. புதிய சிமென்ட் சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டன.

அதிமுக கவுன்சிலர் சந்திர பிரகாஷ் நடத்திய திறப்பு விழாவுக்கு போட்டியாக திருவண்ணாமலை நகராட்சி சார்பில் இன்று(ஜுன் 6-ம் தேதி) மீண்டும் ஒரு திறப்பு விழா நடைபெற்றது. நகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன் திறந்துவைத்தார். பயன்பாட்டுக்கு வந்துவிட்ட சாலைக்கு மீண்டும் ஒரு திறப்பு விழா நடைபெற்றுள்ளது. நேற்று அதிமுக, இன்று நகராட்சி, நாளை யார்? என்ற கேள்வியை 16-வது வார்டு மக்கள் எழுப்பும் நிலைக்கு நகராட்சி தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து 16-வது வார்டு மக்கள் கூறும்போது, “நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பகுதி நிதியை, அதிமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் சந்திர பிரகாஷ் வழங்கி உள்ளார். அதிமுக பிரமுகர் என்பதால், அவரது கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மூலம் திறந்து வைத்தார். இதற்கு போட்டியாக, பயன்பாட்டுக்கு வந்துவிட்ட கடம்பராயன் தெரு சிமென்ட் சாலையை நகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன் மீண்டும் திறந்துவைத்துள்ளார். திமுக, அதிமுக இடையே ஏற்பட்டுள்ள போட்டி எதிரொலியாக, ஒரு சாலைக்கு இரண்டு முறை திறப்பு விழா நடைபெற்றுள்ளது விநோதமாக இருக்கிறது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.