“ஒருபோதும் சாதிய பாகுபாடு காட்டியது கிடையாது” – ககன் தீப் சிங் பேடி விளக்கம்

சென்னை: தன் மீது ஈரோடு கூடுதல் ஆட்சியர் மணிஷ் நரனவாரே ஐஏஎஸ் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங், “ஒருபோதும் சாதிய ரீதியாக பாகுபாடு காட்டியது கிடையாது” என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலிடம் மேலும் கூறும்போது, “மணிஷ் நல்ல அதிகாரி. அவரின் கடிதத்தை படித்தேன். அவருடைய கடிதம் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. கரோனா காலத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றினார். சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய காலத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றினார். அவரின் பணிகளை பாராட்டி சான்றிதழ்களை அளித்துள்ளேன். அவருடைய ‘சர்வீஸ் ரெக்கார்டு’ என்று அழைக்கப்படும் பணிப் பதிவேட்டில் அவர் சிறப்பாக பணியாற்றினார் என்று பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தேன். யாரும் ஒருபோதும் சாதிய ரீதியாக பாகுபாடு காட்டியது கிடையாது” என்று அவர் கூறினார்.

புகார் என்ன? – முன்னதாக, மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் தற்போதைய தமிழக சுகாதாரச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி தன்னை சாதிய ரீதியாக துன்புறுத்தியதாக ஈரோடு கூடுதல் ஆட்சியர் டாக்டர் மணிஷ் நரனவாரே ஐஏஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இது தொடர்பாக தலைமைச் செயலாளருக்கு அவர் 2 பக்க புகார் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

அந்தப் புகாரில், “நான் டாக்டர் மணிஷ் நரனவாரே, தற்போதைய ஈரோடு கூடுதல் கலெக்டர், சென்னை மாநகராட்சியில் துணை சுகாதார ஆணையராக இருந்தபோது ஏற்பட்ட மோசமான அனுபவங்களப் பகிர்ந்து கொள்கிறேன். 14/06/2021 முதல் 13/06/2022 வரை நான் அந்தப் பதவியில் இருந்தபோது அப்போதைய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி என்னை சாதிய ரீதியாக பாகுபாடு காட்டி துன்புறுத்தினார். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிந்துகொண்டே என்னை வெகுவாக அடக்குமுறைக்கு ஆளாக்கினார்.

பணி நிமித்தமாக என்னை துன்புறுத்தினார். கோப்புகளில் கையெழுத்திடுவதை தாமதப்படுத்தினார். ஒரு கையெழுத்துக்காக இரவு வெகு நேரம் காத்திருக்கச் செய்வார். ஒரு வழியாக இரவில் காத்திருந்து அவரைப் பார்க்கச் சென்றால், தம்பி இப்போ லேட் ஆயிடுச்சு நாளை பார்த்துக்கலாம் என்பார். இதுவே தினமும் நடந்தது. ஒருமுறை இந்தூர் மாநகராட்சிக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, நீ புத்த மதத்தைப் பின்பற்றிக் கொண்டு ஏன் உஜ்ஜைன் கோயிலுக்குச் செல்கிறாய் என்று கேட்டு காயப்படுத்தினார்.

எனக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணனுக்கும் இடையே விரிசல் ஏற்படச் செய்தார். அதேபோல் திடக்கழிவு மேலாண்மை சீனியர் இன்ஜினியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுடனும் எனக்கு மோதல் ஏற்படும் சூழலை உருவாக்கினார். நான் இங்கே பட்டியலிட்டது ஒரு சில சம்பவங்கள் தான். அவருடைய தொந்தரவு தாங்காமல் நான் மன அழுத்தத்திற்குச் சென்றேன். அது குறித்து நான் அவரிடமே சொன்னேன். ஆனாலும் அவர் எதையும் மாற்றிக் கொள்ளவில்லை.

ஒரு கட்டத்தில் நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட நினைத்தேன். ஆனால் என் தந்தை ஊரில் இருந்து கிளம்பிவந்து என்னை தைரியப்படுத்தினார். ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக, மூத்த அதிகாரியாக இருந்து கொண்டு அவர் செய்த இந்த செயல்கள் அனைத்துமே எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது. சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்று கோருகிறேன். என் துயர்மிகு காலத்தில் எனது மருத்துவரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா ஐஏஎஸ்-ஸும் உற்ற துணையாக இருந்து என்னைத் தேற்றினர்” என்று மணிஷ் தனது புகாரில் கூறியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.