தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் வருண் தேஜ்ஜூம், தமிழில் ‘பிரம்மன்’ படத்தில் நடித்த லாவண்யா திரிபாதியும், ‘Antariksham 9000 KMPH’ என்ற படத்தில் நடித்த போதிலிருந்து காதலித்து வந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதற்கு முன்னரே இருவரும் ‘மிஸ்டர்’ என்ற படத்தில் இணைந்து நடித்தபோதே இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, பின்னர் அது டேட்டிங் வரை சென்றது என்கின்றனர்.

அதே போல வருண் தேஜ்ஜின் சகோதரி நிஹாரிகா கொனிடேலாவின் திருமணத்தில் கலந்துகொண்ட ஒரு சில முக்கியப் பிரபலங்களில் லாவண்யாவும் ஒருவர். அப்போதும் இந்தக் காதல் குறித்த செய்திகள் கசிந்தன. ஆனால் இதுகுறித்து இருவருமே பொதுவெளியில் பேசியதில்லை.
இந்நிலையில் ஹைதராபாத்தில் நேற்று வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி இருவருக்கும் மிகப் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த உடனேயே, தங்கள் காதலை அதிகாரபூர்வமாக அறிவித்து இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.

வருண் தேஜ்ஜின் பெற்றோர், நாக பாபு, சகோதரி நிஹாரிகா கொனிடேலா மற்றும் மாமாக்கள் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், அவரது உறவினர்கள் ராம் சரண், அல்லு அர்ஜுன், சாய் தரம் தேஜ், பஞ்ச வைஷ்ணவ் தேஜ் போன்ற பலரும் கலந்துகொண்டுள்ளனர். இவர்களின் திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.