அவசர சட்டம் விரைவில் பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் என தகவல் – அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

புதுடெல்லி

தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நீடிக்கிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது என்றும், ஜனநாயக நாட்டில் துணைநிலை ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும் என்றும் கூறியது.

டெல்லி அரசுக்கு பொது ஒழுங்கு, காவல்துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் உள்ளன. குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கே உள்ளது எனவும் தெரிவித்தது. இந்தத் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது. அதாவது, குடிமைப்பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் வகையில், நிரந்தரமாக தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (என்சிசிஎஸ்ஏ) உருவாக்குவதற்காக இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், அவசர சட்டத்திற்கு எதிராக கெஜ்ரிவால் நாடு முழுவதும் ஆதரவு திரட்டினார். பாராளுமன்றத்தில் அவசர சட்டத்தை தோற்கடிக்கவும் அவர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே, மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரமாண்டமான பேரணி நடத்தப்பட்டது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலர்கள் அந்தந்த தொகுதிகளில் இருந்து ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்றனர்.

இந்நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,

அவசரச் சட்டம் மூலம் இன்று டெல்லியில் சர்வாதிகாரம் அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் அமல்படுத்தப்பட்ட அவசர சட்டம் விரைவில் பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும்.பிரதமர் மோடியால் நாட்டைக் கவனிக்க முடியாது, ஆனால் அவர் தினமும் எழுந்து டெல்லியில் நடக்கும் பணிகளை நிறுத்துகிறார் என தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.