ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் பதிவு சாத்தியமில்லை – தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் கருத்து

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் வருகைப் பதிவு சாத்தியமில்லை என்று தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் மருத்துவர் கே.செந்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், மருத்துவமனைகளிலும் ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் முறையை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) கட்டாயமாக்கியுள்ளது. பேராசிரியர்கள், மருத்துவர்கள் பணிக்கு வரும்போதும், வீடு திரும்பும் போதும் தினமும் இருமுறை பயோமெட்ரிக் வருகைப் பதிவு மேற்கொள்ள வேண்டுமென என்எம்சி அறிவுறுத்தியுள்ளது. அதில் பதிவாகும் வருகை விவரங்களை என்எம்சி நேரடியாக கண்காணித்தும் வருகிறது.

பயோமெட்ரிக் வருகைப் பதிவை முறையாக பின்பற்றாததால், சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை என்எம்சி ரத்து செய்ய முடிவு செய்தது. அந்த குறைபாடுகள் சரி செய்யப்படுவதாக மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகங்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, அந்த கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து முடிவை என்எம்சி கைவிட்டது.

நடைமுறைச் சிக்கல்கள்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறை மருத்துவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துமென தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் கே.செந்தில் கூறுகையில், “அரசு மருத்துவர்கள் பணி நேரத்தைக் கணக்கிட்டு பணியாற்றுவதில்லை. உதவி பேராசிரியர்கள் கிட்டத்தட்ட 24 மணி நேரம்கூட பணியாற்றுகின்றனர். நடைமுறைச் சிக்கல்கள்இருப்பதால் பயோமெட்ரிக் வருகையை இருமுறை மேற்கொள்வது சாத்தியமில்லை. தற்போது அனைத்து மருத்துவர்களையும் வருகையை மட்டும் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளோம். பணியிலிருந்து திரும்புவதை பதிவு செய்யுமாறு கூறவில்லை. இந்த விவகாரத்தில் என்எம்சியின் விதிகள் மற்றும் விளக்கங்களைப் பெற்ற பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.