திருநாவலூர் ஒன்றியத்தின் புதுச்சிக்கல் இது… – ஜல்ஜீவன் திட்டத்தை சரியாக செய்திருக்கலாம்!

கள்ளக்குறிச்சி: ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமக் குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீர் இணைப்புகள் சாலையில் விளிம்பு பகுதியிலேயே பொருத்தப்படுவதால் நீர் தேங்கி சாலைகள் சேதமாகி வருகின்றன. சாலைகள் சேதமடைவது ஒருபுறம் என்றாலும், குடிநீர் குழாய் இணைப்பை மாற்றியமைக்க கூடுதல் நிதி தேவைப்படுவதால் மக்கள் வரிப்பணம் விரையமாகிறது.

அனைவருக்கும் குடிநீரை உறுதி செய்யும் வகையில் ஊரகப் பகுதியில் ஜல் ஜீவன் மற்றும் 15-வது மானிய நிதிக் குழுத் திட்ட நிதியின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயனாளிகள் பங்களிப்புடன் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 21,195 குடியிருப்புகளுக்கு சுமார் ரூ.17 கோடியே 5 லட்சம் செலவில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் 920 குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கப்படவில்லை. இதுவரை வழங்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கான இணைப்புகள் அனைத்தும் பயனாளிகள் பங்களிப்புடன் வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவை தரமற்ற வகையில் தான் பொருத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக பயனாளியின் குடியிருப்பு பகுதியில் குடிநீர் இணைப்புகள் அமைக்கும் போது, அவை அவர்களின் குடியிருப்புகளுக்குள் அமைக்கப்படாமல், வீடுகளை ஒட்டி, சாலையின் விளிம்பு பகுதியிலேயே அமைக்கப்படுகிறது.

சாலைக்கும் குடியிருப்புக்கும் இடையே வடிகால் வாய்க்கால் அமைக்காமலேயே இந்த குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிராம பகுதி என்பதால் குடிநீர் குழாயில் தண்ணீர் வரும்போது, பாத்திரங்கள் கழுவுவது, துணி துவைப்பது, குளிப்பது என அனைத்து செயல்பாடுகளையும் சாலை விளிம்பு பகுதியிலேயே, அதாவது வீட்டின் முகப்பிலேயே மேற்கொள்கின்றனர். இதனால் தண்ணீர் வழிந்தோடி சாலைகள் சேதமடைகின்றன.

குறிப்பாக திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கூட்டடி கள்ளக்குறிச்சி, ஆரிநத்தம் ஆகிய கிராமங்களில் சாலையின் விளிம்பில் குடிநீர் குழாய் பொருத்தப்பட்டுள்ளதால், வாகனங்கள் வந்து செல்லும் நிலையில் தண்ணீர் பிடிப்பதில் கடும் நெருக்கடியை மக்கள் சந்திக்கின்றனர். உளுந்தூர்பேட்டை முதல் சேந்தநாடு வரை தற்போது தார் சாலை விரிவுப்படுத்தப்பட்டு, புனரமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் வடிகால் வாய்க்காலுக்கான கான்கிரீட் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இது சாலைகளின் விளிம்புகளில் பொருத்தப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை மேலும் சிக்கலுக்கு ஆளாக்கியிருக்கிறது. பல இடங்களில் குடிநீர் குழாய்களை பெயர்த்தெடுத்தே ஆக வேண்டும் என்று சாலை விரிவாக்கப் பணியாளர்கள் கூறுகின்றனர். முறையாக திட்டமிட்டு, சற்றே உள்பகுதியில் போக்குவரத்துக்கு தொந்தரவு இல்லாதவாறு இந்த குடிநீர் குழாய்களை அமைத்திருக்கலாம் என்று இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

‘வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வந்ததே பெரிய விஷயம்; அது எங்கே இருந்தால் என்ன?’ என்று நினைக்கும் எளிய மனிதர்களிடம், “ரோட்டை பெரிதாக்கப் போகிறார்கள். இந்த குழாயை பிடுங்கி போட்டு விடுவார்கள். அப்புறம் அதெல்லாம் சரியாகி எப்போ தண்ணீ வருமோ!” என்று அக்கம்பக்கத்தினர் பீதியை கிளப்ப சற்று கதிகலங்கி போயிருக்கிறார்கள்.

“இப்படி குடிநீர் குழாய்களை அமைத்தால், அடுத்த சாலை விரிவாக்கத்தில் சிக்கல் ஏற்படும் என்பது ஒப்பந்ததாரர்களுக்கு நன்றாக தெரியும். தற்போது, சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ளும் தேசிய நெடுஞ்சாலை துறை இதில் குறிப்பிட்ட அளவுக்கு நஷ்டஈட்டை ஊரக வளர்ச்சித் துறைக்கு தரும். அந்த நிதி அப்படி இப்படியாக கடந்து, அதில் சுயலாபம் அடையும் வகையிலேயே இந்த திட்டத்தை இப்படி செய்திருக்கிறார்கள்” என்று விஷயமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜனிடம் கேட்டபோது, “ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஏற்கெனவே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்கமும், அதையொட்டி வடிகால் அமைக்கும் பணியும் தற்போது நடக்கிறது. குடிநீர் குழாய் இணைப்பு குறித்து அவ்விடத்தை பார்வையிட்டு, அதன்பின் அதுகுறித்து உரிய சரியான முடிவெடுக்கப்படும்” என்று தெரிவிக்கிறார். தேசிய நெடுஞ்சாலை துறை இதில் குறிப்பிட்ட அளவுக்கு நஷ்டஈட்டை ஊரக வளர்ச்சித் துறைக்கு தரும். சுயலாபம் அடையும் வகையிலேயே இந்த திட்டத்தை இப்படி செய்திருக்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.