மக்கள் கலைஞனாகணும்: மதன்பாப் மகிழ்ச்சி

ஒரே சிரிப்பில் நம்மை சிரிக்க வைக்கும் மதன்பாப், ஒரு நடிகர் என்பது தெரியும். ஆனால் ரியல் எஸ்டேட் அதிபர், ஏற்றுமதியாளர், பேச்சாளர் என பல முகங்கள் அவருக்கு உண்டு. ஓரிரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு பல்வேறு சினிமாக்களில் தலைகாட்டி வரும் அவர் சமீபத்தில் மகிழ்வோர் மன்ற கூட்டத்தில் பங்கேற்க கோவில்பட்டி வந்திருந்தார்.

தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவருடன் பேசியதிலிருந்து..
இன்றைய சினிமா வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் ஆண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியாகி கொண்டிருந்த சினிமாக்கள் இன்று பல மடங்காக அதிகரித்திருக்கிறது. இன்று ஓடிடி உள்ளிட்ட பல பொழுது போக்கு அம்சங்கள் வந்து விட்டன. இதுவும் ஆரோக்கியமான சூழல் தான். சினிமாத்துறை செழிப்பாக இருக்கிறது.
நான் மூன்றாண்டுகளுக்கும் மேலாக சினிமாக்களில் தலைகாட்டாததற்கும் சில காரணங்கள் உள்ளன. ஏற்றுமதி தொழிலில் ரூ.கோடிக் கணக்கில் நஷ்டம். கொரோனா பரவல் காரணமாக பல பிரச்னைகள். இதனால் கனடா உள்ளிட்ட சில நாடுகளுக்கு சென்று கடனை சரிசெய்து வர வேண்டியதாகி விட்டது. அந்த காலகட்டத்தில் வந்த வாய்ப்புகளை ஏற்க முடியாததால் சினிமாக்களில் பார்த்திருக்க முடியாது.

தற்போது கிக், கோஷ்டி, 1947, வாஸ்கோடகாமா உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறேன். பெரிய ஹீரோவுடன் பட வாய்ப்பு வந்தது. இதற்காக தாடியும் வளர்த்தேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படம் செய்ய முடியவில்லை.
நகைச்சுவை காட்சிகளில் இரட்டை அர்த்த வசனங்கள், விரசங்கள் இருப்பதாக கூறுகிறீர்கள். மக்கள் அதை ரசிப்பதால் தான் அதுபோன்ற காட்சிகள் இடம் பெறுகின்றன. ஆனால் நான் அப்படி பேசியது கிடையாது.

காமெடி நடிகர்கள் கதாநாயகர்களாக நடிப்பது வரவேற்கத்தக்கது தான். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் நடித்து கொண்டே தனியாக சர்வர்சுந்தரம், நீர்க்குமிழி படங்களில் நாகேஷ் நடித்தார். ஆனால் நான் ஹீரோ ஆகி விட்டேன். இனி காமெடி பண்ண மாட்டேன் என இருக்க கூடாது. வரும் வாய்ப்புக்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
முழு நேர சினிமா, இசைக் கலைஞராக பயணத்தை தொடருவேன். காமெடி மட்டுமன்றி பல்வேறு கதாபாத்திரங்கள் வந்தால் அதையும் ஏற்று பன்முகம் காட்டவுள்ளேன். மக்கள் கலைஞனாக இருக்கணும். அதுதாங்க என் ஆசை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.