​குழந்தைத் தொழிலாளர் முறை; திருமாவளவன் முக்கிய கோரிக்கை..!

குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றாக ஒழிப்பதற்கும் மாநிலத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைப்பதற்கும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று

தலைவர்

கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாளில் (ஜூன் 12) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான பிரச்சாரம் (சிஏசிஎல்) என்ற அமைப்பு கடந்த 2022-ஆம் ஆண்டில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அது கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை 180% அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவுள்ளது.

கோவிட் பெருந்தொற்று நாடுதழுவிய அளவில், வேலை இழப்புகள், சம்பள வெட்டுக்கள் மற்றும் பள்ளி மூடல்கள் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுத்தது. இவற்றால் தான் தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதையும் அறியமுடிகிறது. குறிப்பாக, வேளாண்மை, செங்கல் சூளைகள், கட்டுமானம், வீட்டுவேலை, தொழிற்சாலைகள், மீன்பிடித்தல், கைத்தறித் தொழில் போன்ற துறைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இந்நிலையில், அந்த அறிக்கையில் தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. ”மாநிலத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விரிவான கணக்கெடுப்பு நடத்துதல்; குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தும் முதலாளிகளைத் தண்டிக்கக் கடுமையான சட்டங்களை இயற்றுதல்; குழந்தைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம் அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும்படி செய்தல்” போன்றவை குறிப்பிடத் தக்கவையாகும்.

குழந்தைத் தொழிலாளர் முறையானது மனித உரிமை மீறல் என்றும் அதை ஒழிக்க வேண்டும்” என்றும், தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.சிறுவர்களை விட சிறுமிகள் குழந்தைத் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது அதிகம் என்றும்; குழந்தைத் தொழிலாளர்கள் பெரும்பாலும் ஆபத்தான வேலை நிலைமைகளுக்கு ஆளாகிறார்கள்; இது காயங்கள், நோய்கள் மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும் என்றும்; குழந்தையின் உடல், உணர்ச்சி மற்றும் கல்வி வளர்ச்சியில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையானது குழந்தைத் தொழிலாளர் முறை தமிழகத்தில் கடுமையானதொரு பிரச்சனையாக இருப்பதை எடுத்துக்காட்டியுள்ளது. அந்த அறிக்கை வெளியானதற்குப் பிறகு தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக, குழந்தைத் தொழிலாளர்களிடம் வேலை வாங்குவோர் மீது கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனினும், மறுவாழ்வுக்கான திட்டங்கள் இன்னும் கூடுதலாக செயல்படுத்தப்பட வேண்டும். மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களுக்குத் தொழில் பயிற்சி கல்வியை அளிக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் சட்டப்பூர்வ வயதை அடைந்தவுடன் வருவாய் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்பைப் பெற முடியும்.

மேலும், குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றாக ஒழிப்பதற்கும் மாநிலத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைப்பதற்கும், அவர்களுக்குரிய பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்’ என கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.