ஷேன் வார்னே வாழ்க்கை தொடர்:படுக்கையறை காட்சியில் மண்டை உடைந்த ஹீரோ கை உடைந்த நாயகி

சிட்னி

ஆஸ்திரேலியாவின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே. இவரது வாழ்க்கை வரலாறு தொடராக எடுக்கப்பட்டு வருகிறது.இந்தத் தொடரை ஆஸ்திரேலியாவின் சேனல் ஒன்பது தயாரித்துள்ளது. இதில் ஷேன் வாரனேவாக அலெக்ஸ் வில்லியம்ஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி சிமோன் கலாஹனாக மார்னி கென்னடி ஆகியோர் நடித்து வருகின்றனர். அதன் படப்பிடிப்பு நடைபெறும் போது விபத்து ஏற்பட்டு உள்ளது. அதுவும் படுக்கையறை காட்சியை படமாக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

ஒரு படுக்கையறை காட்சியை எடுக்கும் போது இத்தகைய சோகமான விபத்து என்பது உண்மையிலேயே கற்பனை செய்ய முடியாதது. ஆனால் இது எப்படி நடந்தது?

ஒரு நெருக்கமான படுக்கையறை காட்சி படமாக்கப்பட்டது. இருவரும் ஓடிச்சென்று படுக்கையில் குதிக்க வேண்டும். அப்போது எதிர்பாராத விதமாக படுக்கை சரிந்தது. இதில் இருவரும் தரையில் விழுந்தனர். இதனால் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. மார்னி கென்னடிக்கு மணிக்கட்டு உடைந்தது.அலெக்ஸ் வில்லியம்சுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது . உடனடியாக இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு கட்டு போடப்பட்டது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல வீரரான ஷேன் வார்னே ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராக பணியாற்றி வந்தார்.52 வயது சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே தாய்லாந்தில் உள்ள சொகுசு பங்களாவில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

1992-ம் ஆண்டு சிட்னியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஷேன் வார்னே 2007-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற்றார். அவர் ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்டில் விளையாடி 708 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். 194 ஒருநாள் போட்டியில் விளையாடி 293 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனுக்கு (800 விக்கெட்) அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் வார்னே ஆவார். 1999-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியின் வெற்றியிலும் வார்னே முக்கிய பங்கு வகித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமை (இங்கிலாந்துக்கு எதிராக 195 விக்கெட்) வார்னேவுக்கு உண்டு. 2005-ம் ஆண்டு அவர் டெஸ்டில் 96 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதுநாள் வரை ஒரு ஆண்டில் டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமை அவரிடமே உள்ளது. சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி ஐ.பி.எல். போட்டியிலும் அவர் முத்திரை பதித்துள்ளார். 2008-ம் ஆண்டு வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மகுடம் சூடியது.

தனது மாயாஜால சுழற்பந்து வீச்சால் 15 ஆண்டு காலம் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த வார்னேவின் திடீர் மரணம் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களையும், வீரர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.