சில வருடங்களுக்கு முன்பு, ஏதாவது ஒரு வீரர் 20 கிரர்ண்ட் ஸ்லாம்கள் வெல்வார் எனச் சொல்லியிருந்தால் அவரைப் பார்த்து அனைவரும் எள்ளி நகையாடியிருப்பர். ஆனால் இப்போது பெடரர், நடால் மற்றும் ஜோக்கோவிச் என மூன்று பேர் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். அதிலும் உச்சமாக நோவாக் ஜோக்கோவிச் தனது 23வது கிராண்ட் ஸ்லாம் வெற்றியை நேற்று பிரஞ்ச் ஓபன் மூலம் பதிவு செய்துள்ளார்.

இதன்மூலம் அதிக கிராண்ட் ஸ்லாம், அனைத்து கிராண்ட் ஸ்லாமும் மூன்று அல்லது அதற்கு மேல் வென்ற முதல் வீரர் போன்ற சாதனைகளை படைத்துள்ளார். கடந்த வருடம் நடால் 22 கிராண்ட் ஸ்லாம் வென்றபோது இதனை ஜோக்கோவிச் முறியடிப்பார் என்பது அனைவரும் கணித்ததே. நேற்று நடந்த பிரெஞ்ச் ஓபனில், கேஸ்பர் ரூட் உடனான இறுதி போட்டியில் 7-6, 6-3 & 7-5 என நேர் செட்களில் வென்று சாதனை படைத்துள்ளார்.
36 வயது செர்பிய வீரரான ஜோக்கோவிச் ஓபன் எராவில் பெடரர் மற்றும் நடால் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலத்தில் தானும் சளைத்தவன் இல்லை என தொடர்ந்து இருவரிடமும் வெற்றிகளைக் குவித்தார். ஆனால் இருவருக்கும் இல்லாத சிறப்பு ஜோக்கோவிச்சிற்கு உண்டு. அதுதான் டிபன்ஸிவ் (defensive) கேம் பிளே . இதுபோன்று டிபன்ஸிவ் வீரர்கள் தொடந்து வெற்றிகரமாக நீடிப்பது குறைவு. அப்படிப்பட்ட டிபன்ஸிவ் வீரர்தான் மெத்வதேவ், என்னதான் அமெரிக்க ஓபன் தொடரில் ஜோகோவிச்சை வென்று கோப்பையைக் கைப்பற்றியிருந்தாலும், ஆஸ்திரேலியா ஓபன் இறுதிப் போட்டியில் நடாலிடம் தோற்ற பிறகு அவர் இன்னும் மீளவில்லை. ஆனால் எத்தனை தோல்விக்குப் பிறகும் தொடர்ந்து தன்னெழுச்சியாக இப்படி உயர்ந்துள்ளார் ஜோக்கோவிவ்ச்.

இவருக்கு நடால் மற்றும் பெடரருக்கு இருந்ததைப் போன்ற ஆதரவு எப்போதும் இருந்ததில்லை. ஆனாலும் அதனைப் பற்றி பெரிதும் கவலைபடாமல் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வந்தார். அல்காரஸ் உடனான அரையிறுதி வெற்றிக்குப் பிறகு ரசிகர்கள் கேலி செய்வதைப் பற்றிக் கேட்டபோது, “அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை, இது முதலுமில்லை கடைசியுமில்லை. நான் தொடர்ந்து வென்றுகொண்டே இருப்பேன்.” என பதிலளித்தார்.
24 வயது இளம் வீரரான கேஸ்பர் ரூட்டிற்கு இது மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டி. இதற்கு முன் 2022ஆம் ஆண்டு பிரஞ்ச் ஓபனில் தனது ஆதர்சமான நடாலிடமும், 2022 அமெரிக்க ஓபனில் ஸ்பானிஷ் வீரர் அல்காரஸிடமும் தோற்றார். கேஸ்பர் ரூட் நடால் நடத்தும் டென்னிஸ் அகாடமியில் பயிற்சி பெறுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதன்முதலில் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போது, அது தற்செயலாக பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து தனது ஆட்டத்தை மெருகேற்றி 3 கிராண்ட்ஸ்லாம் இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். 2013-ல் பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் நடால் ஆடுவதை ரசிகராக பார்த்த ரூட் தற்போது தனது உழைப்பால் 2 பிரெஞ்ச் ஓபன் இறுதி போட்டிகளில் விளையாடியுள்ளார்.

நேற்றைய போட்டியில் தொடக்கத்தில் ரூட் ஆதிக்கம் செலுத்தினார் தொடர்ந்து மூன்று கேம்களை கைப்பற்றினார். அதிலும் 2வது கேம் நீண்ட நேரம் நீடித்தது. அதற்கு பிறகு அப்படியே ஜோக்கோவிச் வசம் ஆட்டம் சென்றது. 7வது கேமில் ஜோக்கோவிச் கேம் பாய்ண்டில் சென்ற நீண்ட ரேலியில்(rally) தனக்கு கிடைத்த எளிதான வாய்ப்பை கோட்டைவிட்டார் ரூட். அதுவரை நிதானமாக ஆடிய ரூட் அதற்கு பிறகு தொடர்ந்து சொதப்பினார். டை-பிரேக்கில் பெரிதாக ஆட்டத்தை தன்வசப்படுத்த முடியவில்லை. ஜோக்கோவிச் முதல் செட்டை வென்றார். அடுத்த செட்டை ஜோக்கோவிச் மிக எளிதாகக் கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் பத்தாவது கேம்வரை ஜோக்கோவிச்சுக்குப் பெரிதாக வாய்ப்பு கொடுக்காமல் விளையாடினார் ரூட் . அதற்கு பிறகான ரூட்டின் சர்வீஸ் கேமை ( 11) எளிதாக கைப்பற்றினார் ஜோக்கோவிச். என்னதான் ரூட் போர்ஹேண்டில் சிறந்த வீரராக இருந்தாலும் இந்த ஆட்டத்தில் தொடர்ந்து போர்ஹேண்டில் நிறைய தவறுகள் செய்தார். ஜோக்கோவிச் நிறைய அன்போர்சுடு எரர் (unforced error) செய்தாலும் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தத் தவறினார் ரூட். ஜோக்கோவிச்சினுடைய சர்வுகளை சரிவர விளையாடவில்லை. இவையெல்லாம் ஜோக்கோவிச் நேர் செட்களில் வெற்றி பெற வாய்ப்பாக அமைந்தது.
மெத்வதேவ் போல தோல்வியால் துவண்டுவிடாது தொடர்ந்து தன் ஆட்டத்தை மேம்படுத்தினால் எதிர்காலத்தில் நிறைய ஸ்லாம்கலை ரூட் வெல்வார், நல்ல வீரருக்கும் சிறந்த வீரருக்கும் வித்தியாசம் அதுவே. நடால் மற்றும் பெடரருடனான போட்டியால் ஜோக்கோவிச் இவ்வளவு தூரம் உயர்ந்தாரா அல்லது அவர்கள் இல்லையென்றால் இன்னும் நிறைய ஸ்லாம்கள் வென்றிருப்பாரா எனத் தெரியாது. ஆனால் ஜோக்கோவிச் போட்டி முடிந்தபிறகு இப்படி கூறியிருப்பார்.

“நடால் மற்றும் பெடரரை எப்படி வெல்வது என மணிக்கணக்கில் சிந்தித்துள்ளேன். கடந்த 20 ஆண்டுகளாகப் பெரும்பாலும் அவர்களே என்னுடைய சிந்தனையை ஆக்ரமித்துள்ளனர். அவர்களை கடந்தது மகழ்சியளிக்கிறது. ஆனால் அனைவரும் அவர்களுடைய வரலாற்றை அவர்களே எழுதுகின்றனர்.” என்றார்.
ஆக, தொடர்ந்து வரலாறு படைக்க வாழ்த்துக்கள் ஜோக்கோவிச்!