கடந்த 1950-களில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மணிமலர்காவு கோயிலில், (`மரு மரக்கால் சமரம்’) மார்பகத்தை மறைக்கும் உரிமைக்கு எதிரான போராட்டத்தில் பங்குபெற்றுப் போராடிய தேவகி நம்பீசன், ஞாயிற்றுக்கிழமையன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 89 வயதான இவர், வயதுமூப்பினால் உண்டாகும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
மணிமலர்காவு கோயில் திருவிழாக்களில், சடங்கின்போது நாயர் பெண்கள் மார்பகத்தை மறைக்காமல், மேலாடை ஏதும் அணியாமல் கலந்து கொள்ள வேண்டும் என்ற சம்பிரதாயம் இருந்துள்ளது. அதோடு பட்டியலின பெண்களை கோயிலின் உள்ளேயும் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் தேவகி மற்றும் பிற தலைவர்கள், பட்டியலின பெண்களை ரவிக்கை அணிந்து சடங்கில் பங்கேற்க வலியுறுத்தினர். அதோடு நாயர் பெண்கள் திருவிழாவில் ரவிக்கை அணிந்து போராட்டம் நடத்தினர்.
தேவகி, பிரசவத்திற்குப் பின் ஓய்வில் இருந்ததால் 1956 -ல் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை. ஆனால், இந்தப் போராட்டத்தை நடத்த அனைத்து பெண்களையும் ஒருங்கிணைத்து முக்கியப் புள்ளியாகச் செயல்பட்டார்.
சடங்குகளின் போது பெண்கள் ரவிக்கை அணிவதைத் தடுக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, தலித் பெண்களைச் சடங்குகளைச் செய்ய கோயில் அதிகாரிகள் அனுமதித்ததால் இந்தப் போராட்டம் வெற்றி பெற்றது.
தேவகி நம்பீசன், மறைந்த கம்யூனிஸ்ட் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஏ.எஸ்.என்.நம்பீசன் அவர்களைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆர்யாதேவி, சதிதேவி, சோமநாதன், கீதாதேவி என 4 பிள்ளைகள் இருக்கின்றனர். தேவகியின் மறைவுக்கு பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.