புதுடில்லி: திஹார் சிறைக்குள் தாதா தில்லு தாஜ்புரியா படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிறையில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள புதுடில்லி சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
புதுடில்லியில் உள்ள திஹார் சிறையில் பிரபல தாதா தில்லு தாஜ்புரியா அடைக்கப்பட்டிருந்தார். இவரை மற்றொரு தாதா கும்பல் கடந்த மே 2ல் சிறைக்குள்ளே வைத்து சினிமா பாணியில் கொடூரமாக கொலை செய்தது.
போலீசார் விசாரணையில் சிறை அறையில் வைக்கப்பட்டிருந்த ‘எக்ஸாஸ்ட் பேன்’ எனப்படும் வெப்ப காற்றை வெளியேற்ற உதவும் மின் விசிறியின் இறக்கைகளை கழற்றி அவற்றை கூர்மையாக்கி தாஜ்புரியாவை கொலை செய்தது தெரிய வந்தது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக, திஹார் சிறையில் பல மாற்றங்களை மேற்கொள்ள நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இது குறித்து சிறைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தில்லு தாஜ்புரியா கொலை செய்யப்பட்டது போல் எதிர் காலத்தில் எந்தவொரு சம்பவமும் நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
இதன்படி திஹார் சிறையில் கைதிகள் அறையில் வைக்கப்பட்டுள்ள 2000க்கும் மேற்பட்ட இரும்பு மின் விசிறிகள் அகற்றப்பட்டு பிளாஸ்டிக் மின் விசிறிகள் பொருத்தப்படும். இந்தப் பணியை இம்மாத இறுதிக்குள் பொதுப்பணித் துறை செய்து முடிக்கும். மேலும் சிறைச்சாலையில் இருட்டாக இருக்கும் பகுதிகளில் எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்படும். இந்த நடவடிக்கை திஹார் சிறையில் மட்டுமே நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement