நடன இயக்குநர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, கடந்த 1995-ம் ஆண்டு ரம்லத் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2011-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதன்பின் நடிகை நயன்தாராவும் இவரும் காதலித்தனர். ஆனால் அந்தக் காதல் தோல்வியில் முடிந்துவிட்டது.

பின் கொரோனா சமயத்தில் படப்பிடிப்புக்காக மும்பையில் தங்கியிருந்தபோது, முதுகுவலிக்காகச் சிகிச்சைக்குச் சென்ற இடத்தில் பிசியோதெரபிஸ்டான டாக்டர் ஹிமானி சிங் என்பவருடன் அறிமுகம் உண்டாகி அவரை காதலித்து 2020-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரபுதேவாவிற்குப் பெண் குழந்தைப் பிறந்திருக்கிறது என்ற செய்தி வெளியானது. அதனை முதன்முதலில் பிரேக் செய்து விகடன் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதன் பிறகு அது பல்வேறு ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது.
இதுதொடர்பாக பிரபுதேவா எதுவும் தெரிவிக்காமலிருந்த நிலையில் சமீபத்தில் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். இது குறித்துப் பேசிய பிரபுதேவா, “ஆமாம். எனக்குக் குழந்தை பிறந்தது உண்மைதான். நான் 50-வது வயதில் மீண்டும் தந்தையாகி இருக்கிறேன்.
இது எனக்கு மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் உள்ளது. எனது வேலைகளைக் குறைத்து விட்டேன். இதுவரை நிற்காமல் ஓடிய நான் இனிமேல் என் மகள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்க முடிவு செய்திருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார்.