ஹைதராபாத்: தெலங்கானாவில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி (ஒய்எஸ்ஆர்டிபி) காங்கிரஸுடன் இணைய வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தாண்டு இறுதியில் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் என முக்கிய மாநிலங்களில் இந்தாண்டு தேர்தல் நடைபெறுகிறது.
இதில் தெலங்கானாவில் இப்போது கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அங்கே காங்கிரஸ், பாஜக கட்சிகளும் வென்று ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
தெலங்கானா: இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக அங்குள்ள ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி காங்கிரஸ் உடன் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவராக ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மகளும் தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் மகளுமான ஒய்.எஸ்.ஷர்மிளா இருக்கிறார். ஜெகன் மோகன் ரெட்டியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா என்று தனிக் கட்சி உருவானது.
அவர் தெலங்கானாவில் தனது கட்சியை வளர்க்கக் கடுமையாகப் போராடி வருகிறார். இந்தச் சூழலில் தான் அவர் தனது கட்சியைக் காங்கிரஸில் இணைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் கர்நாடக காங்கிரஸ் தலைவரும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை ஷர்மிளா சந்தித்துப் பேசியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிவக்குமார் உடன் மீட்டிங்: கடந்த மே 29-ம் தேதி பெங்களூரில் இருவருக்கும் இடையே சந்திப்பு நடந்தது. கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றிக்கு சிவகுமாரின் உழைப்பை ஷர்மிளா பாராட்டினார். தெலுங்கானாவில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து காங்கிரசை வலுப்படுத்தவும், கடந்த காலங்களில் கட்சியை விட்டு வெளியேறிய தலைவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் சிவக்குமார் ஈடுபடுவார் எனக் கூறப்படும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஒய்.எஸ்.ஆர் குடும்பத்துடன் சிவக்குமார் நெருக்கமான நட்பை கொண்டிருந்தார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, ஷர்மிளா காங்கிரஸில் இணைய வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. வரும் தேர்தலில் கே.சி.ஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சியைத் தோற்கடிக்க யாருடனும் கூட்டணி அமைக்கத் தயாராக உள்ளதாகவே ஷர்மிளா கூறியிருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.
எப்போது நடக்கும்: ஷர்மிளா தனியாகக் கட்சியை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடப்பா மாவட்டத்தில் ஜூலை 8ஆம் தேதி இந்த இணைப்பு நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. சோனியா காந்தி, ராகுல் காந்தி ஜூலை 8ஆம் தேதி விமான விபத்தில் உயிரிழந்த ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டிக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. அப்போது இந்த இணைப்பு நடக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இது எதுவும் உறுதியாகவில்லை என்றும் இப்போது இது தொடர்பாக எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அவர் பெங்களூரில் சிவகுமாரைச் சந்தித்து உண்மைதான் என்றாலும் அது தனிப்பட்ட முறையில் நடந்த சந்திப்பு என்றும் அதில் அரசியல் நோக்கம் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
காங்கிரஸ் மற்றும் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி என இரண்டு கட்சிகளும் இரண்டாம் கட்ட தலைவர்கள் இந்த இணைப்பில் முழுமையாகத் திருப்தியாக இல்லை என்றும் கூறப்படுகிறது. ஒரு வேலை கட்சிகள் இணைந்தால் ஷர்மிளா உள்ளிட்ட சில ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி பிரமுகர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றே தெரிகிறது.