சென்னை மாநகரின் நிகழ்கால ரவுடிகளுக்கிடையேயான அதிகார சண்டையில் ரிட்டையர்டு ரவுடியான `ரைட்டு’ நுழைந்தால் என்ன ஆகும் என்பதே ‘தலைநகரம் 2’ படத்தின் கதை.
நஞ்சுண்டா (பிரபாகர்), வம்சி (விஷால் ராஜன்), மாறன் (ஜெய்ஸ் ஜோஸ்) தலைநகர் சென்னையை தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என முறையே பிரித்து ஆட்டிப்படைக்கின்றனர். இவர்களுக்குள் யார் சென்னையை முழுமையாக அதிகாரம் செய்வது என்ற போட்டி நிலவுகிறது. இதற்கு ஒருவர் மாற்றி ஒருவர் பழிவாங்கும் யூகங்களை வகுக்கிறார்கள்.

அதே தலைநகரில் ஒரு காலத்தில் பிரபல ரவுடியாக இருந்த ரைட்டு (சுந்தர் சி) திருந்தி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வாழ்ந்து வருகிறார். அவருக்குத் துணையாக மாலிக்கும் (தம்பி ராமையாவும்) அவரது மகள் பர்வீனும் (ஆயிராவும்) இருக்கிறார்கள். இதற்கிடையே மத்திய சென்னையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வம்சியின் காதலியும் சினிமா நடிகையுமான சித்தாரவை (பாலக் லால்வானி) கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துவிடுகிறான் தென் சென்னை நஞ்சுண்டா. இதற்கு முன் சித்தாரவுக்கும் மாலிக்கிற்கும் ஏற்கெனவே தகராறு ஒன்று இருக்க அவர் மேல் சந்தேகம் திரும்புகிறது. இந்நிலையில் அவரை காப்பாற்ற மீண்டும் ரவுடியாகக் களம் இறங்குகிறார் ‘ரைட்டு’. மூன்று ரவுடிகளின் பாதைக்குக் குறுக்கே செல்லும் ரிட்டையர்டு ரவுடி செய்யும் சாகசங்கள் என்னென்ன?
ரிட்டையர்டு ரவுடியாக இயக்குநர் சுந்தர்.சி. ‘அவன மட்டும் தொட்றாதீங்க சார்’ என ‘கே.ஜி.எஃப்’ ரக பில்டப் வசனங்களுடன் என்ட்ரி கொடுக்கிறார். அவர் உடல்மொழியில் இருக்கும் தீவிரமும் இறுக்கமும், அவரது முக பாவனையிலும் வசன உச்சரிப்பிலும் இல்லை என்பது சோகம். தம்பி ராமையா உணர்ச்சிகரமான காட்சிகளில் நிறைவான நடிப்பைக் கொடுத்திருந்தாலும், நடு நடுவே காமெடி எனப் பார்வையாளர்களைச் சோதிக்கிறார். இஸ்லாமியராகக் காட்டிக் கொள்ளப் பேசும் வசனங்களில் செயற்கைத்தனம் மிகையாக இருப்பது மைனஸ். அவரது மகளாக வரும் ஆயிரா தனக்கான பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார். படத்திலும் சினிமா நடிகையாகவே வரும் பாலக் லால்வானி நடிக்க மட்டும் மாட்டேன் என அடம்பிடிக்கிறார்.
மூன்று முக்கிய வில்லன்கள், அவர்களுக்குக் கீழ் கிளை வில்லன்கள், அவர்களது அடியாட்கள் என ரயிலில் ஆட்களை ஏற்றுவது போல வில்லன்களை வண்டியில் ஏற்றியிருக்கிறார் இயக்குநர் துரை. இதில் முக்கிய வில்லன்களாக வரும் விஷால் ராஜன், பிரபாகர், ஜெய்ஸ் ஜோஸ் ஆகியோர் கவனம் பெறுகிறார்கள். இயக்குநர் துரை சிறப்புக் கதாபாத்திரத்தில் தோன்றி `அன்பே மனிதம்’ என ஒரு முறை சிரிக்க வைக்கிறார். ஆனால் மீண்டும் மீண்டும் அதே வசனத்தைச் சொல்வது `தங்கதுரை, ஒரு அளவுக்குத்தான்’ டெம்ளேட்டை ஞாபகப்படுத்துகிறது.
படத்தின் ஆரம்பமே வித்தியாசமாக கரண்ட் கம்பியில் கொக்கி போட்டு பிணத்தை எரிக்கும் காட்சியில் தொடங்குகிறது. படத்திற்கும் இந்தக் காட்சிக்கும் என்ன சம்பந்தம் என்பதை அறிய க்ளைமாக்ஸ் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் படம் முழுக்க இப்படி விதவிதமான டிசைன்களில் கொலைகளைச் செய்கிறார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் முகம் சுளிக்கும் அளவுக்கு ஓவர்டோஸ் ஆகி எல்லை மீறுகின்றன இந்தக் காட்சிகள். கொடூர வில்லிகளாகக் காட்டப்படும் அந்த மூன்று பெண்களின் மிகையான கதாபாத்திர வரைவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. படத்தின் தொடக்கத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு ஸ்டாட்ஸ் போடுவது போல ’10 கொலைகள், 14 திருட்டு, சொத்து மதிப்பு 91 கோடி’ என ஓரத்தில் புள்ளிவிவரங்கள் போட்டுத் திகைக்க வைக்கிறார்கள். (இதெல்லாம் யாருங்க கேட்டா?)

இரண்டாம் பாதியில் கொஞ்சம் டிராக் மாறி நம்மை இருக்கையின் நுனிக்குக் கொண்டுவருவார்கள் என நாமும் மனதைத் தேற்றிக்கொண்டு படம் பார்த்தால் அதி பயங்கரமான வன்முறை காட்சிகள், லாஜிக் மீறல்கள் என இன்னும் அதிகமாகச் சோதிக்கிறார்கள். ‘கமர்ஷியல் படம்தானே ஓரளவுக்கு மேல் லாஜிக் எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது’ என நமக்கு நாமே ஆறுதல் சொன்னாலும், குறைந்தபட்ச சுவாரஸ்யம்கூட இல்லாத காட்சிகளை அடுக்கி வைத்து திரைக்கதை என நம் காதில் பூ சுற்றுகிறார்கள்.
நாயகன் தன்னை தாக்க வரும் வில்லன்களை பலூனில் ஆசிட்டை அடைத்து அதை எறிந்து தாக்குகிறார். பாத்ரூம் ஷவரில் தண்ணீருக்குப் பதில் பெட்ரோலை ஊற்றி அதை வில்லன் மேல் கொட்டி பிறகு ஸ்ப்ரே லைட்டர் வைத்துப் பற்ற வைக்கிறார். இந்த மாதிரியான `மூட்டைப் பூச்சியைக் கொல்லும் நவீன யுக்தி’களைப் பார்க்கும்போது இதை நேராகவே கொட்டிக் கொன்று இருக்கலாமே எனக் கேட்காமல் இருக்க முடியவில்லை.
தெலுங்கு வசன உச்சரிப்பு என்றால் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்பும் ‘உ’ சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எழுதப்படாத விதியின் அடிப்படையில், ‘ரைட்டுஉஉ, ரைட்டுஊ’ என வில்லன் நஞ்சுண்டா கோபமாகப் பேசுவது நமக்குச் சிரிப்பை மட்டுமே வர வைக்கிறது. ஸ்டன்ட் மாஸ்டர் டான் அசோக் இயக்குநரின் வெரைட்டியாகக் கொலை செய்யும் முயற்சிகளுக்கு உதவியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக இறுதி காட்சியில் கதாநாயகன் செய்யும் கொலை ‘இதுக்கு அந்த வில்லன்களே பரவாயில்லையே’ என யோசிக்க வைக்கிறது. பில்டப் காட்சிகளில் ஜிப்ரானின் பின்னணி இசை ஓகே ரகம். இ.கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவில் சராசரியான பணியைச் செய்துள்ளார். படத்தொகுப்பில் முதல் முப்பது நிமிடங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆர்.சுதர்சன், அதன் பின் அந்த கத்தரியைக் கீழே போட்டுள்ளார்.

இந்த தலைநகரம் யூனிவர்ஸில் காவல்துறை என்ற ஒன்றும் இருக்கவே செய்கிறது. ஆனால், அவர்களும் ரவுடிகளோடு ‘மாமா, மச்சான்’ என்று பேசிக்கொள்ளாத குறைதான். மற்றபடி அவர்களால் படத்தில் எதுவுமே நடக்கவில்லை. அதிலும், நாயகனின் வெற்று வாய் சவடாலுக்கு சிபிசிஐடி-யே பயப்படுவதெல்லாம் ரொம்பவே அநியாயம் பாஸ். இப்படிக் காட்சிகளில் எந்த நம்பகத்தன்மையும் இல்லாமல், திரைக்கதையில் எந்த மெனக்கெடலும் செய்யாமல் வக்கிரமான, வன்முறையான காட்சி அமைப்புகளை மட்டுமே நம்பி நகர்கிறது படம். வில்லன்கள் இறுதிவரை புத்திசாலித்தனமாக எதுவுமே செய்யவில்லை, அதனால் நாயகன் சண்டை மட்டுமே போடுகிறார், போட்டுக்கொண்டிருக்கிறார், இனியும் போடுவார்.
பழைய பழிவாங்கும் கேங்ஸ்டர் கதையில் பின் இணைப்பாக `வித்தியாசமாகக் கொலை செய்வது எப்படி?’ என்ற கையேட்டையும் சேர்த்து, நம் நேரத்தையும் கொலை செய்யும் படமே இந்த `தலைநகரம் 2′.