'கனவு இல்லம்'.. வைரமுத்துக்கு வீடு கிடைக்கலையா? வருத்தப்பட்ட சவுக்கு சங்கர்.. "இல்ல புரியல"

சென்னை:
‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் கவிஞர் வைரமுத்துக்கு வீடு ஒதுக்கப்படாததற்கு தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர். இந்த திட்டத்தின் கீழ் வைரமுத்துவுக்கு வீடு ஒதுக்கப்பட இருந்த சூழலில், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தததே சவுக்கு சங்கர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், “தமிழ் மொழி வளர்ச்சிக்காக சாகித்ய அகாடமி விருது, கலைஞர் செம்மொழி விருது ஆகியவற்றில் ஏதேனும் ஒரு விருதை பெற்றவர்களுக்கு ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் அவர்கள் விரும்பிய இடத்தில் வீடு வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தின் கீழ், கடந்த வருடம் எழுத்தாளர்கள் ஈரோடு தமிழன்பன், புவியரசு, சுந்தரமூர்த்தி, பூமணி, மோகராசு, இமயம் ஆகிய 6 பேருக்கு அவர்கள் விருப்பத்துக்கேற்ப சென்னை, கோவையில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. அந்த வகையில், ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ புதினத்துக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் வைரமுத்துக்கு ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது.

சவுக்கு சங்கர் எதிர்ப்பு:
தமிழக அரசின் இந்த முடிவுக்கு பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “வைரமுத்து வீடு ஏதும் இல்லாம தெருவுலயா இருக்காரு? இவருக்கு எதுக்கு இப்போ கனவு இல்லம் வீடு? 2006-ம் ஆண்டு (திமுக ஆட்சி) சம்பாரிச்சது கொஞ்ச நஞ்சம் அல்ல. பெரியார் படத்துல ஒரு பாட்டுக்கு 5 லட்சம் சம்பளவம் வாங்குன பெரிய மனுசன். அந்த படமே அரசு மானியதுத்துல எடுத்ததுதான். இந்த அரசாங்கத்துக்கு துளி கூட சூடு, சொரணை கிடையாதா?” எனக் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தார்.

வைரமுத்துக்கு ‘நோ’:
மேலும், வைரமுத்துக்கு சென்னையில் சொந்தமாக இருக்கும் 3 வீடுகளின் முகவரி உள்ளிட்ட தகவல்களையும் அவர் பதிவிட்டிருந்தார். சவுக்கு சங்கரின் இந்த பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதுடன், பலர் அதற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருந்தனர். இது அரசாங்கத்தின் காதுகளுக்கும் எட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் அதிருப்தியை தவிர்ப்பதற்காக, நடப்பாண்டு ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வைரமுத்துக்கு வீடு ஒதுக்கப்படவில்லை.

சவுக்கு சங்கர் கிண்டல்:
எழுத்தாளர்கள் பொன். கோதண்ட ராமன், எஸ். ராமகிருஷ்ணன், மருதநாயகம், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் உள்ளிட்ட 10 பேருக்கு நடப்பாண்டு ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வைரமுத்துக்கு வீடு ஒதுக்கப்படாததை கிண்டல் செய்யும் விதமாக, “அவருக்கு இல்ல போல. பாவம்.” என சவுக்கு சங்கர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதற்கு கீழே பல நெட்டிசன்கள், “வைரமுத்துக்கு வீடு கிடைக்கிறதையும் கிடைக்காம பண்ணிட்டு போஸ்ட் வேறயா” என கிண்டல் அடித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.