சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மண்டி – குல்லு இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை முதல் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இச்சாலையில் சுமார் 200 சுற்றுலாப் பயணிகள் நடுவழியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதுகுறித்து டெல்லியில் இருந்து சுற்றுலா சென்ற ஆஜாஸ் ஹாசன் கூறும்போது, “பூந்தர் விமான நிலையம் செல்லும் வழியில் நாங்கள் சிக்கிக் கொண்டோம். மண்டி, சுந்தர்நகர் இடையே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு போலீஸார் எங்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி திரும்பிச் செல்லுமாறு கூறினர். இங்கு 15 கி.மீ. நீளத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இங்கு ஓட்டல் அறைகள் எதுவும் கிடைக்கவில்லை. பல குடும்பங்கள் கார்கள் மற்றும் பஸ்களில் காத்திருக்கின்றன. அவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக கவலைப்படுகின்றனர். பலர் உணவகங்கள் முன் காத்திருக்கின்றனர்” என்றார்.
டெல்லியை சேர்ந்த சோகைல் யூசூப் கூறும்போது, “சாலையில் போக்குவரத்து மீண்டும் எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை. போலீஸாரிடம் இருந்து முன்கூட்டியே எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை” என்றார்.
இதனிடையே இமாச்சலபிரதேசத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.