எகிறும் திமுகவின் BP.. பெரியார் பல்கலைக்கழகத்தில் என்ன பேச போகிறார் ஆளுநர்? பரபரப்பு தகவல்

சென்னை:
திமுக அரசுக்கு தன்னால் இயன்ற வரை தலைவலியை கொடுத்து வரும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, நாளை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்தது. ஆளுநர் தூக்கிப்பிடிக்கும் சனாதன தர்மத்திற்து எதிரியாக கருதப்படும் பெரியார் குறித்து அவர் ஏதேனும் கருத்து தெரிவித்தால் அதை வைத்து எப்படி அரசியல் செய்வது என கழக உடன்பிறப்புகள் யோசித்து வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து திமுக அரசுக்கு பல்வேறு வழிகளில் நெருக்கடி கொடுத்து வருகிறார் ஆர்.என். ரவி. தமிழகத்தில் ஆளும் அரசாங்கத்துக்கு ஆளுநர்கள் நெருக்கடி கொடுப்பது புதிது ஒன்றும் அல்ல. கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் இருந்தே இது நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம், தங்கள் கட்சி ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் குடைச்சல் கொடுப்பதை ஒரு பாரம்பரியமாகவே வைத்திருக்கின்றன. இதற்கு காங்கிரஸ், பாஜக என்ற இரண்டு கட்சிகளுமே விதிவிலக்கு அல்ல.

புயலை கிளப்பிய விமர்சனம்:
ஆனால், இதற்கு முன்பு தமிழக அரசு – ஆளுநர்கள் இடையேயான மோதல் அலுவல் ரீதியாகவே இருக்கும். முக்கிய கோப்புகளை கிடப்பில் போடுவது, மசோதாக்களுக்கு அனுமதி தராமல் இழுத்தடிப்பது என்றே இந்த மோதல் இருக்கும். ஆனால், தற்போதைய ஆளுநர் ஆர்.என். ரவி, அலுவல் ரீதியாக மட்டுமின்றி சித்தாந்த ரீதியாகவும் திமுகவுடன் மோதி வருகிறார். திமுகவின் சமீபத்திய அடையாள முழக்கமான திராவிட மாடலை, “காலாவதியான மாடல்” என்றும், சமூக நீதிக்கு எதிரான மாடல் எனவும் கூறி வெறுப்பேற்றினார்.

சனாதன தர்ம சர்ச்சை:
அதேபோல, சித்தாந்த ரீதியாக திமுக கடுமையாக எதிர்த்து வரும் சனாதன தர்மத்தை செல்லும் இடமெல்லாம் புகழ்ந்து வருகிறார் ஆளுநர் ரவி. சனாதன தர்மம்தான் இந்தியாவை கட்டமைத்தது என்றும், வெளிநாடுகளில் இருந்து புகுந்த வேற்று மதங்களே சனாதன தர்மத்தின் அடையாளத்தை அழித்தது எனவும் பாஜகவின் வாய்ஸாவே பேசி வருகிறார் ஆளுநர். அண்மையில் நடைபெற்ற வள்ளலார் பிறந்தநாள் விழாவில் கூட, “சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரமாக வள்ளலார் இருக்கிறார்” எனப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

பெரியார் பல்கலைக்கழகம்:
ஜாதி பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டு மனிதர்களுக்கு சேவை செய்து வந்த வள்ளலாருக்கும், ஜாதி படிநிலையை உருவாக்கிய சனாதன தர்மத்துக்கும் என்ன சம்பந்தம்? என ஆளுநரை திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வறுத்தெடுத்தன. இந்த சூழலில்தான், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்கவுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் சனாதன தர்மத்துக்கு எதிராகவும், ஜாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிராக போராடி வந்தவர் பெரியார்.

பெரியாரை விமர்சிப்பாரா?
மேலும், பாஜக எதிர்த்து வரும் திராவிட சிந்தனைக்கு தமிழகத்தில் விதைப்போட்டவரும் பெரியார்தான். அப்படி இருக்கும் போது, அவரது பெயரை தாங்கிய பல்கலைக்கழகத்துக்கு செல்லும் ஆளுநர் ஆர்.என். ரவி அங்கு என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி வருகிறது. ஏற்கனவே பெரியாரின் சிலைகள் உடைக்கப்படும் என ஹெச். ராஜாவின் அட்மின் பதிவிட்ட விவகாரமே தமிழகத்தை ஒரு உலுக்கு உலுக்கியது. அவ்வாறு இருக்கும் போது, பெரியாருக்கு எதிராக ஒருவேளை ஆளுநர் பேசினால் அது மிகப்பெரிய சூறாவளியை கிளப்பும் என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.