சென்னை: நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடித்துவரும் படம் லியோ.
இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது ஆந்திர மாநிலம் தலக்கோணத்தில் நடைபெற்று வருகிறது.
இன்னும் சில தினங்களில் லியோ படத்தில் தன்னுடைய போர்ஷனை விஜய் முடிக்கவுள்ள நிலையில், அடுத்த சில தினங்களில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லியோ படத்தில் விஜய் கேரக்டர்கள் குறித்து பகிர்ந்த ரத்னகுமார்: நடிகர்கள் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் என ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்கள் இணைந்து நடித்துவரும் படம் லியோ. இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள போதிலும் இதில் புதிய நடிகர்களை இணைத்து வருகிறார் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஏராளமான நட்சத்திரங்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்குவதில் அவர் வல்லவர் என்பதை சமீபத்தில் வெளியான விக்ரம் படம் மூலமே நாம் அறிந்துக் கொள்ள முடிந்தது.
இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த பிப்ரவரியில் துவங்கி தொடர்ந்து 52 நாட்கள் காஷ்மீரின் பல இடங்களில் நடைபெற்றது. அதிகமான காட்சிகள் அங்கு எடுக்கப்பட்ட நிலையில், சென்னையிலும் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவுபெற்றது. படத்தின் பிரம்மாண்டமான பாடலாக நா ரெடி பாடல் உருவான நிலையில், ஏறக்குறைய 2000 நடனக்கலைஞர்களை வைத்து இந்தப் பாடல் எடுத்து முடிக்கப்பட்டது.
முன்னதாக இந்தப் பாடலுக்காக ரிகர்சலும் சில தினங்கள் நடத்தப்பட்டன. இந்தப் பாடலை விஜய் பாடியுள்ள நிலையில், அனிருத் இசையில் பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இருந்தாலும் அவரது முந்தையப் படங்களின் பாடல்களோடு ஒப்பிடும்போது இந்தப் பாடல் அந்த அளவிற்கு ரசிகர்களை ஈர்க்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. இந்நிலையில் விரைவில் படத்தின் இசை வெளியீடு குறித்த அப்டேட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் இசை வெளியீடு சென்னையில் இல்லாமல் இந்த முறை மதுரையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. திறந்தவெளி மைதானத்தில் 50 ஆயிரம் ரசிகர்கள் பங்கேற்கும் வகையில் இந்த இசை வெளியீடு திட்டமிடப்பட உள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் வயதான கேங்ஸ்டர் வேடத்தில் நடித்துள்ளார். அவரது கெட்டப் வீடியோக்களும் வெளியான நிலையில், நா ரெடி பாடலில் அவரின் இளமையான லுக்கும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தில் நெருப்பு மற்றும் ஐஸ் இவற்றின் ஐடியாவை லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளதாக படத்தின் வசனகர்த்தா ரத்னகுமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் அப்பாவி குடும்ப தலைவராகவும் அதிரடி கேங்ஸ்டராகவும் விஜய் இரண்டு கேரக்டர்களில் கலக்கலான நடிப்பை கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவர் தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் பணியாற்றி வருகிறார். முன்னதாக மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களுக்கும் இவர் வசனம் எழுதியுள்ளார். இயக்குநராகவும் மேயாத மான், ஆடை, குலுகுலு போன்ற படங்களை இவர் இயக்கியுள்ளார்.