இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தியின் வாகனத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் ஹெலிகாப்டர் மூலம் சுரசந்த்பூர் சென்றார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வசிக்கும் மைதேயி வகுப்பினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குகி பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த 2 மாதங்களாக அங்கு இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வன்முறைக்கு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக நேற்று மணிப்பூர் தலைநர் இம்பால் சென்றடைந்தார். அங்கிருந்து கலவரத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட சூரசந்த்பூருக்கு பாதுகாப்பு வாகனங்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், அவரது பாதுகாப்பு வாகனத்தை விஷ்ணுபூர் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “விஷ்ணுபூர் மாவட்டம் உட்லூ கிராமம் அருகே உள்ள நெடுஞ்சாலையில் சிலர் டயர்களை கொளுத்தினர். மேலும் அவ்வழியில் ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எனவே, ராகுலின் வாகனத்தை பாதுகாப்புக் காரணங்களுக்காகவே தடுத்து நிறுத்தினோம்” என்றார். எனினும், ராகுல் காந்தியின் காரை தடுத்து நிறுத்திய போலீஸாரைக் கண்டித்துதான் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி தங்கள் கிராமங்களை பார்வையிட வேண்டும் என அந்த பெண்கள் வலியுறுத்தினர் என்றும் காங்கிரஸார் தெரிவித்தனர்.
சர்வாதிகார போக்கு: இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், “கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கருணை அடிப்படையில் சந்திக்க சென்ற ராகுல் காந்தியை இரட்டை இன்ஜின் அரசுகள் சர்வாதிகார போக்குடன் தடுத்து நிறுத்தி உள்ளன. இதை ஏற்க முடியாது. இது அரசியல்சாசன மற்றும் ஜனநாயக விதிகளை மீறும் செயல் ஆகும்” என பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து, மீண்டும் இம்பால் திரும்பிய ராகுல் காந்தி, ஹெலிகாப்டர் மூலம் சூரசந்த்பூர் சென்றார். அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருப்பவர்களை ராகுல் சந்தித்துப் பேசினார்.