புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் அத்தீக் அகமது. அத்தீக் மீதும், அவரது சகோதரர் அஷ்ரப் அகமது மீதும் 100-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. இருவரும் போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.
இவர் மீதான வழக்குகளின் போது அவரிடமிருந்து சட்டவிரோதமாக வைத்திருந்த நிலங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த இடங்களில் மத்திய அரசின் திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா (நகர்ப்புறம்) திட்டத்தின் வீடுகள் கட்டப்பட்டு வந்தன. ஒவ்வொரு வீடும் 41 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அறைகள், ஒரு சமையலறை, ஒரு கழிப்பறை வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த இடங்களில் கட்டப்பட்ட 76 வீடுகளின் பயனாளிகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற விழாவில், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏழைகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டதற்கான ஆணைகளை வழங்கினார்.
விழாவில், ‘‘ஆதித்யநாத் பேசும் போது, ‘‘ மாஃபியாக்களிடமிருந்த நிலங்களை அரசு பறிமுதல் செய்து அதே ஏழை மக்களுக்கு வீடுகளைக் கட்டி வழங்கி வருகிறது. இது உ.பி. அரசின் மகத்தான சாதனை’’ என்று தெரிவித்தார்.